காட்பாடி: சொல்லி விட்டு ஓட்டுப் போடவில்லை என்றால் கடவுள் உங்களுக்கு தண்டனை அளிப்பார் என அரசு விழாவில், பொதுமக்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் நடைபெற்ற நல திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில், அவர் பேசியதாவது: தூங்குற குழந்தைக்கும், ஓடிச்சென்று பால் கொடுக்கும் தாய் போல, தாயுள்ளத்துடன் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு உதவி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பேசிய மகிமண்டலம் பஞ்சாயத்துத் தலைவர், ‘கோவில் கட்ட நிதி வேண்டும்’ என கேட்டார். நாங்கள் நிதி வாங்கும் நேரம் இது.
எல்லோரும் சேர்ந்து, வரும் தேர்தலிலும் எனக்கு ஓட்டு போடுங்க. உங்களுக்கு என்ன செய்யணுமோ, அதையெல்லாம் செய்கிறேன். நான் வாக்கு கொடுத்தா, அதை கட்டாயம் செய்வேன். செய்ய முடியாமல் போனால், தெய்வம் என்னை நின்று கொல்லும்.
அதேதான் உங்களுக்கும். சொல்லிவிட்டு ஓட்டுப் போடவில்லை என்றால், கடவுள் உங்களுக்கு தண்டனை அளிப்பார். இப்போதைக்கு மக்களுக்கும் எனக்கு ஒப்பந்தம். சொன்னபடி, நீங்கள் எனக்கு ஓட்டளித்தால், பிறகு கோவில் கட்ட நிதி கொடுப்பேன். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
