ஓட்டுரிமையை பறிக்க சதி; மேற்கு வங்க முதல்வர் மம்தா மீண்டும் அதே பல்லவி!

கொல்கட்டா: ”மேற்கு வங்க வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறிக்க பா.ஜ.,வும், தேர்தல் கமிஷனும் கூட்டு சேர்ந்து சதி செய்கின்றன. இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்,” என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு தமிழகத்துடன் சேர்த்து அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தமிழகத்தை போலவே இங்கும் எஸ்.ஐ.ஆர்., பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.

ஆளும் திரிணமுல் காங்கிரசின் எதிர்ப்புக்கு இடையே இந்த பணி நடந்த நிலையில், சமீபத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதில், 63 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். மேலும், 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

இதனால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 7.66 கோடியில் இருந்து, 7.04 கோடியாக குறைந்துள்ளது. தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பெயர்களை இறுதி பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளதாக ஆளும் திரிணமுல் காங்., குற்றஞ்சாட்டி வருகிறது.

இதை கண்டித்து, கொல்கட்டாவில் திரிணமுல் காங்., சார்பில் போராட்டம் நடந்தது. இதில், அக்கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.இதில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

மேற்கு வங்க வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறிக்க பா.ஜ.,வும், தேர்தல் கமிஷனும் கூட்டு சேர்ந்து சதி செய்கின்றன. இதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இந்த கூட்டு சதியை விரைவில் உலகிற்கு அம்பலப்படுத்துவேன்.

இறுதி பட்டியலில், தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளர்களை இறந்தவர்களாக தேர்தல் கமிஷன் தவறாக குறிப்பிட்டுள்ளது. இறந்தவர்களாக அறிவிக்கப்பட்ட அந்த வாக்காளர்களை, இதே போராட்டக் களத்திற்கு அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்துவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு வங்க கவர்னராக இருந்த அனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்தது, அம்மாநில அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இதையடுத்து, அம்மாநில கவர்னராக தமிழக கவர்னர் ரவி நேற்றிரவு நியமிக்கப்பட்டார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர், தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க உள்ளார்.

இது குறித்து, திரிணமுல் காங்., ராஜ்யசபா எம்.பி., சாகரிகா கோஷ் கூறுகையில், ”மேற்கு வங்கத்திற்கு ஒருதலைபட்சமாக புதிய கவர்னரை நியமித்து, கூட்டாட்சி தத்துவத்தை மோடி அரசு மீண்டும் அவமதித்துள்ளது. கவர்னர் மாளிகைகள் பா.ஜ.,வின் தேர்தல் கட்டளை மையங்களாக மாறி வருகின்றன,” என்றார்.

எம்.பி., சர்ச்சை பேச்சு

மம்தா நடத்திய போராட்டத்தின் போது, திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி., கல்யாண் பானர்ஜி பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பான தன் எதிர்ப்பை பதிவு செய்ய முதல்வர் மம்தா கடந்த மாதம் டில்லி சென்றார். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை சந்தித்து முறையிட்ட மம்தாவை நோக்கி அவர் விரலை உயர்த்தி பேசினார். ஞானேஷ்குமார் அரசியலமைப்பு பதவியில் இல்லாமல் இருந்தால் அவரது விரலை வெட்டியிருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கல்யாண் பானர்ஜியின் இந்த பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Source link