கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை சட்டசபை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள ட்வண்டி 20 கட்சி வேட்பாளராக நடிகை அஞ்சலி நாயர் போட்டியிடுகிறார். ட்வண்டி 20 கட்சி வேட்பாளர்கள் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அஞ்சலி நாயரும் பலாப்பழம் சின்னத்தில் வாக்குகேட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அஞ்சலி நாயர் என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானாலும், அரசு பதிவுகளில் அஞ்சலி பி.வி என்றுதான் அவரது பெயர் உள்ளது. அரசு ஆவணங்களின்படி வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரது பெயர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் “அஞ்சலி பி.வி’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயரை அஞ்சலி நாயர் என பதிவுசெய்ய வேண்டும் என அவர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மனு அளித்திருந்தார். ஆனால், அதற்கு சரியான பதில் கிடைக்காததால் அஞ்சலி நாயர் ஐகோர்ட்டில் இதுசம்பந்தமாக மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வேட்புமனுவில் அஞ்சலி பி.வி என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தாலும், பொதுவாழ்விலும் திரைத்துறையிலும் அஞ்சலி நாயர் என்று பிரபலமாக அறியப்படுகிறார். தேர்தல் பிரசாரத்தின்போதும் அஞ்சலி நாயர் என்ற பெயரை அவர் பயன்படுத்தியதால் அஞ்சலி பி.வி. என்பதை மாற்றி அஞ்சலி நாயர் என்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட், ஒரு நபர் அறியப்படும் பெயரே வாக்குச் சீட்டிலும் இருக்க வேண்டும் என்று கூறியதுடன், இது சம்பந்தமாக மறுபரிசீலனை செய்து தகுந்த முடிவெடுக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிவுறுத்தியது.
