தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வரும், அதிமுக மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வமும், ஐயப்பனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துடன் உடன் திமுகவில் இணைந்த அவரது ஆதரவாளரான ஐயப்பனுக்கு இந்த தேர்தலில் திமுக வாய்ப்பளிக்கவில்லை.
அதாவது இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கி தருவதாக ஐயப்பனிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஐயப்பன் எம்.எல்.ஏவாக பதவி வகித்த உசிலம்பட்டி தொகுதியை, கூட்டணியில் அங்கம் வைத்துள்ள காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியதால் ஐயப்பன் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கேப்டனாக ஒரு தொண்டனை கரை சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் தவறிவிட்டார் என முன்னாள் எம்.எல்.ஏ ஐயப்பன் தனது ஆதரவாளர்களிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மதுரை உசிலம்பட்டியில் உள்ள தனது வீட்டில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஓ.பன்னீர்செல்வம் உடன் கடைசி வரை கூட இருந்த நிலையில் எனக்கு கை கொடுப்பார் என்று நம்பியிருந்த நிலையில் அவர் என்னை கைவிட்டுவிட்டார். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் திமுகவின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று செய்தியாளர்களைச் சந்தித்து ஐயப்பன் கூறினார்.
இந்த நிலையில், சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த ஐயப்பன் தற்போது சசிகலாவின் அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த ஐயப்பன், சசிகலாவின் அஇபுதமமுகவில் இணைந்துள்ளார். இணைந்த உடனேயே அவரை உசிலம்பட்டி தொகுதியில் வேட்பாளராக சசிகலா அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஐயப்பன், “திமுகவில் இருந்து உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொண்டர்களோடு இன்று சசிகலாவிடம் எங்களை இணைத்து கொண்டுள்ளோம். உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு என்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். திமுகவில் இணைந்து ஒரு மாதம் காலம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாத காலத்தில் எந்த நிர்வாகிகளோடும் எங்களை தொடர்பு கொள்ள விட மாட்டிக்கிறார்கள். நாங்கள் திமுகவில் இணைந்தோமே தவிர அநாதையாக தான் இருந்தோம். அதனால் தான் நாங்கள் நேற்று பேட்டி கொடுத்து பார்த்தோம். அந்த பேட்டிக்கு யாரும் செவி சாய்க்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா, பா.ம.க நிறுவனர் ராமதாஸுடன் இணைந்து இந்த சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
