ஓபிஎஸ் போல விஜய்க்கும் ஏற்பட்ட சிக்கல்- சிலையை இறக்கிய தவெக வேட்பாளர்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர் அருண்குமார் திடீரென காணாமல் போனதால் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளரை காணவில்லை என அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றான சென்னை பெரம்பூர் தொகுதியில் ஜி.விஜய் (G.Vijay), கே.விஜய் (K.Vijay), எஸ்.ஜோசப் (S.Joseph), எம்.ஜோசப் (M.Joseph)என்ற பெயர்களில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் சுயேட்சை சின்னமான பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டபோது ஓபிஎஸ் என்ற ஒரே பெயரில் பல வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை போன்றே பெரம்பூரிலும் குழப்பத்தை ஏற்பபடுத்த விஜய் மற்றும் ஜோசப் என்ற பெயர்களில் வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். 

அதேபோல் இன்னொரு சுவாரசியம் தரும் சம்பவமாக திருச்சி திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர்  நவல்பட்டு விஜி, விஜய்யின் ஐந்தரை அடி உயரச் சிலையை பரப்புரை வாகனத்தில் வைத்து பிரச்சாரம் மேற்கொண்ட நூதன சம்பவமும் வைரலாகி வருகிறது. 

Source link