கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா அதிரடி; உலக நாடுகள் அதிர்ச்சி!

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்மோஸ் நீரிணையை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக, உலக சந்தைக்கு வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டுள்ளது. இந்த நீரிணை பாதை வழியே, உலக அளவிலான 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வர்த்தகம் தடைப்பட்டுள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்து, தேவை அதிகரித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

இதன் காரணமாக, இந்திய உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஹார்மோஸ் நீரிணை பாதை வழியாக ரஷ்யா, சீனா போன்ற நட்பு நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்தது. இதனால், இந்த இருநாடுகளுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல், கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுமதி அளிப்பதாக ஈரான் தெரிவித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. 

இந்த சூழலில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து வந்த ரஷ்யா, பிற நாடுகளுக்கும் விநியோகம் செய்து வந்தது. இதனால், எரிபொருள் தட்டுப்பாடுகளில் இருந்து சில நாடுகள் தப்பித்து வந்தன. குறிப்பாக இந்தியாவும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வந்தது. தற்போது உலக அளவில் நிலவும் பதற்றமான சூழலில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விநியோகம் பல நாடுகளுக்கு உதவிக்கரமாக இருந்து வந்தது.

இந்நிலையில்,  இப்போது ரஷ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அடுத்த நான்கு மாதங்களுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. மேற்காசியப் போர் சூழல், சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணிகள் மற்றும் எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஏற்கனவே, உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து மிகக் குறைவாக இருப்பதால், பல உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Source link