புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதன் தாக்கம், இந்திய பணவீக்கத்தில் பெரிய அளவில் இருக்காது என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதில்:
மேற்கு ஆசியாவில் கடந்த பிப்., 28ல் போர் துவங்குவதற்கு முன் வரை, சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிவிலேயே இருந்தது. அப்போது 69 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, மார்ச் 2ம் தேதிக்குள் 80.16 டாலராக உயர்ந்தது.
இருப்பினும், இந்தியாவின் பணவீக்கம் தற்போது குறைந்த அளவிலேயே இருப்பதால், இந்த விலை உயர்வால் பெரிய பாதிப்பு ஏற்படாது என மதிப்பிடப்பட்டுள்ளது.
சில்லரை விலை பணவீக்கம் கடந்த 2023 – 24ல், 5.40 சதவீதமாகவும், 2024 – 25ல் 4.60 சதவீதமாகவும் இருந்தது. இது நடப்பு 2025 – 26ம் நிதி ஆண்டின் ஏப்., – ஜன., காலகட்டத்தில் மேலும் குறைந்து, கிட்டத்தட்ட 1.80 சதவீதமாக உள்ளது. கடந்த ஜனவரியில் மட்டும், மொத்த பணவீக்கம் 2.75 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கான 2 – 6 சதவீதத்துக்குள் உள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு, கடந்த 2025 பிப்ரவரி முதல் வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட 1.25 சதவீதம் குறைத்துள்ளது.
அரசின் நடவடிக்கைகள்
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை அதிகரித்தல், கொள்முதல் செய்த தானியங்களை வெளிச்சந்தையில் விற்பது, இறக்குமதியை ஊக்குவித்து ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது, ‘பாரத் பிராண்டு’ பெயரில் மானிய விலையில் உணவு பொருட்கள் விற்பனை, எரிபொருள் மீதான வரி குறைப்பு போன்றவை இவற்றில் அடங்கும். 
மேலும், தனிநபர்களின் வருமான வரி விலக்கு வரம்பை 12 லட்சம் ரூபாயாகவும், சம்பளம் பெறுபவர்களுக்கு 12.75 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தியதன் வாயிலாக, மக்களின் செலவிடக்கூடிய வருவாய் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை சீரமைத்ததும் பணவீக்கத்தை குறைக்க உதவியது.

மினிமம் பேலன்ஸ்
‘ஜன் தன்’ உள்ளிட்ட, கிட்டத்தட்ட 72 கோடி அடிப்படை வங்கி கணக்குகளில், மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்பை வைத்திராத வாடிக்கையாளர்களுக்கு அபராத கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்கப்படாது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
