புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக, சர்வதேச எரிசக்தி வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை கடந்த 30 நாட்களில் கிட்டத்தட்ட 56 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 112 டாலராக அதிகரித்துள்ளது.
மேற்காசிய மோதலுக்கு முன்பு ஒரு பீப்பாயின் விலை கிட்டத்தட்ட 70 டாலராக இருந்தது. ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட முக்கிய கடல்வழி வணிக பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கத்தாரின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ஈரானின் தாக்குதலால், அந்நாட்டின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி திறன் 17 சதவீதம் அளவுக்கு சேதமடைந்துள்ளது.
இந்தியா தனது எரிவாயு தேவையில் 47 சதவீதத்தை கத்தாரில் இருந்தே இறக்குமதி செய்வதால், இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ‘சிஸ்டமேட்டிக்ஸ்’ எனும் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையின்படி, மத்திய கிழக்கு நாடுகளின் வினியோகம் குறைந்ததால், மார்ச் மாத துவக்கத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பெருமளவு சரிந்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் வாரத்திற்கு 2.50 கோடி பீப்பாய்களாக இருந்த இந்தியாவின் இறக்குமதி, மார்ச் முதல் வாரத்தில் வெறும் 19 லட்சம் பீப்பாய்களாக குறைந்துள்ளன. சவுதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளின் ஏற்றுமதியும் சரிந்துள்ளதால், இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிசக்தி தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
