கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலரை தாண்டாத வரை பெட்ரோல், டீசல் விலைகள் உயராது; மத்திய அரசு

புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலரை தாண்டாத வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா,இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ,இதன் காரணமாக, ஒரு பீப்பாய் விலையானது 100 டாலரை கடந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை அடுத்து வரக்கூடும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம்.

இந் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலரை தாண்டாத வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு கூறி உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

பெட்ரோல், டீசல் ஆகியவை போதுமான அளவு கையிருப்பில் இருக்கிறது. எனவே விலை உயர வாய்ப்பு இல்லை. கச்சா எண்ணெய் விலையானது 130 அமெரிக்க டாலரை தாண்டாத வரையில் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் இந்த விலையானது 100 டாலர் வரை மட்டுமே இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நாட்டில் உள்ள எந்த எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இருப்பதாக பிரச்னை இல்லை. ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே உள்ள வழித்தடங்களில் ,இருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் வழிமுறைகளை நாங்கள் வேகப்படுத்தி இருக்கிறோம்.

இந்தியாவில் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளும் போதிய அளவு கையிருப்பு உள்ளது. இந்த எரிபொருளை உற்பத்தி செய்வதோடு, ஏற்றுமதியும் செய்வதால் அதுபற்றி கவலை கொள்ள தேவையில்லை. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் பதுக்கி, விற்பனை செய்யப்படுவதை தடுக்க அவற்றை முன்பதிவு செய்யும் நாட்கள் 21 என்பதில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக 55 நாட்களுக்கு முன்னர் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வருபவர்கள் தற்போது 14 நாட்களுக்குள்ளாகவே முன்பதிவு செய்து வருகின்றனர்.

எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. வணிக ரீதியான கேஸ் இணைப்புகளை விட வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு இணைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்பிஜி இறக்குமதிக்கான கூடுதல் வாய்ப்புகளை இந்தியா உருவாக்க முயற்சி எடுக்கிறது. அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே ஆகிய நாடுகள் இந்தியாவிடம் எரிவாயுவை விற்க அணுகி இருக்கின்றன.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாவை LNG) உள்நாட்டில் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு விலை உயர்வு சாத்தியமில்லை. வினியோகத்தில் தடை ஏற்படாத வகையில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உள்நாட்டில் பயன்படுத்துபவர்களுக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு மத்திய அரசு கூறி உள்ளது.

Source link