புதுடில்லி, கடந்த 2025- – 26ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி சீரான வளர்ச்சி கண்டு உள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மார்ச் 31ம் தேதியோடு முடிவுற்ற 2025 – 26ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி சிறப்பாக இருந்தது. அமெரிக்க வரி விதிப்பு, உக்ரைன் – ரஷ்யா போர், மேற்காசியா போர் துவக்கம் உள்ளிட்ட தடைகள் கடந்த நிதியாண்டு முழுதும் இருந்தன. இருப்பினும் சரக்கு ஏற்றுமதி தொடர்ந்து நிலையாக இருந்து வந்தது. ஏற்றுமதி வேகம் குறையாமல் இருந்தது.
நாட்டின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 0.81 சதவீதம் குறைந்து கடந்த பிப்ரவரியில் 3.30 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வர்த்தக பற்றாக்குறை முந்தைய மாதத்தோடு ஒப்பிடும்போது, 2.50 லட்சம் கோடியாக குறைந்து காணப்பட்டது.
கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்., மாதம் வரை ஏற்றுமதி 1.84 சதவீதம் உயர்ந்து, 37 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதே காலகட்டத்தில் இறக்குமதி 8.53 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, 66 லட்சம் கோடி ரூபாயானது. இதனால், வர்த்தக பற்றாக்குறை 28 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டின் 24 லட்சம் கோடி ரூபாயோடு ஒப்பிடும்போது இது அதிகம்.
முந்தைய 2024 – 25ம் நிதியாண்டில், சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி 76.30 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 – 26ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தரவுகளை ஏப்., 15ம் தேதி வர்த்தக அமைச்சகம் வெளியிடும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
