கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியல் ஆர்.பி.ஐ., அனுமதித்தும் வங்கிகள் தர மறுப்பு மத்திய தகவல் ஆணையத்திடம் வங்கிகள் முறையீடு

புதுடில்லி: கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் வாராக்கடன் விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கலாம் என்ற, ரிசர்வ் வங்கி உத்தரவை எதிர்த்து, பேங்க் ஆப் பரோடா, ஆர்.பி.எல்., பேங்க், எஸ் பேங்க், எஸ்.பி.ஐ., ஆகிய வங்கிகள் மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தீரஜ் மிஸ்ரா, வதிராஜ், கிரிஷ் மிட்டல் மற்றும் ராதா ராமன் திவாரி ஆகியோர், டாப் 100 வாராக்கடன், எஸ் வங்கியின் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியல் ஆகியவற்றை வழங்க உத்தரவிடுமாறு, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்தனர்.

மேலும், ஆர்.பி.எல்., மற்றும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை, பேங்க் ஆப் பரோடாவுக்கு விதிக்கப்பட்ட 4.34 கோடி ரூபாய் அபராதம் தொடர்பான ஆவணங்களையும் அளிக்குமாறு தனித்தனியாக அவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

ஆர்.டி.ஐ., சட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் கேட்டுள்ள தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 11வது பிரிவின்படி, வெளியிடலாமா? என, ரிசர்வ் வங்கி கேட்டது.

இதில், ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா? என்று கருத்து கேட்டதுடன், கடந்த 2015-ல் ஜெயந்திலால் மிஸ்திரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், வங்கிகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, தகவலை அளிக்குமாறு வங்கிகளிடம் ஆர்.பி.ஐ., வலியுறுத்தியது. ரிசர்வ் வங்கியின் உத்தரவை எதிர்த்து, இந்த வங்கிகள் மத்திய தகவல் ஆணையத்திடம் முறையிட்டன.

ஆர்.பி.ஐ., கேட்டுள்ள விபரங்களை வெளியிடுவது, வங்கிகளின் வர்த்தக நலனுக்கு ஊறு விளைவிக்கும் எனவும், வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பை மீறுவதாக அமையும் என்றும் வாதத்தை முன்வைத்து உள்ளன.

இதனையடுத்து, தலைமை தகவல் ஆணையர் அமர்வுக்கு விசாரணையை மாற்றி, தகவல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, விபரங்களை அளிக்க வங்கிகளுக்கு தடை விதித்துள்ளது.

Source link