கடற்படையில் இணைகிறது 'அஞ்சதீப்' போர்க்கப்பல்

சென்னை : எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து, அவற்றை தாக்கி அழிக்கும் திறனுடைய, ஐ.என்.எஸ்., ‘அஞ்சதீப்’ போர்க்கப்பல், இந்திய கடற்படையில், வரும் 27ம் தேதி இணையும் நிகழ்ச்சி, சென்னையில் நடக்க உள்ளது.

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, இக்கப்பலை கடற்படைக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதன் வாயிலாக, இந்திய கடற்படை, அதன் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேம்படுத்த உள்ளது.

இந்திய கடற்படையிடம், எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து, அவற்றை அழிக்கும் போர் கப்பல்கள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க, ராணுவ அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், ‘ஐ.என்.எஸ்., அஞ்சதீப்’ என்ற பெயரில், எட்டு கப்பல்கள் கொண்ட, நீர்மூழ்கி போர் கப்பல் எதிர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் 27ல் அர்ப்பணிக்கப்படும் கப்பல், இத்திட்டத்தின் மூன்றாவது கப்பலாகும். கொல்கட்டாவில் உள்ள, ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ்’ நிறுவனம், இக்கப்பலை தயாரித்துள்ளது. கடந்த 2014க்கு பின், இந்திய கடற்படையில் கப்பல் இணைப்பு நிகழ்ச்சி, சென்னையில் நடக்க உள்ளது.

சிறப்பம்சங்கள்:* உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்

* ‘வாட்டர்ஜெட்’ உந்துவிசை வாயிலாக, மணிக்கு 25 கடல் மைல் வேகத்தில் செல்லும்

* நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள், இலகுரக ஏவுகணைகள் மற்றும் டார்பிடோக்கள் ஆகிய ஆயுதங்களை, இக்கப்பலில் இருந்து இயக்க முடியும்

* கடலுக்கடியில் மறைந்திருக்கும் எதிரி கப்பல்களைக் கண்டறிய உதவும், அதிநவீன ‘சோனார்’ எனும் ஆழ்கடல் உணர்கருவி இதில் பொருத்தப்பட்டுள்ளது

* கடலோர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள், மீட்பு பணிகளுக்கென, இந்த கப்பல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Source link