கடலாடி: ஊர்ந்து சென்றவர் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். காலைத் தொட்டு முதல்வர் பதவி பெற்றார், என, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் முதுகுளத்துார் சட்டசபை தொகுதி தி.மு.க., தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் பன்னீர்செல்வம் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்குகிறார். மாநிலத்தின் சொந்த நிதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்கிறார். தமிழகத்திற்கு முறையாக நிதி தர மத்திய அரசு மறுக்கிறது. 40 சதவீதம் தர வேண்டும். ஆனால் 4 சதவீதம் தான் தருகின்றனர். சமீபத்தில் ஒவ்வொரு குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் ரூ.5000 சேர்க்கப்பட்டது. எதிர்பார்க்காத நேரத்தில் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
தரையில் ஊர்ந்து சென்றவர் யார் என உங்கள் அனைவருக்கும் தெரியும். காலைத்தொட்டு முதல்வர் பதவி பெற்றார். நன்றி கெட்ட மனிதர். அவரை அரசியலில் இருந்து துடைத்தெறியும் காலம் வந்துள்ளது. நான் தான் அவரது ஆட்சியை காப்பாற்றினேன். நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அன்றே ஆட்சி கவிழ்ந்திருக்கும். பழனிசாமி நான்கரை ஆண்டுகளாக நான் இருக்க கூடாது என்ற சிந்தனையிலேயே இருந்தார். இதுவரை நடந்த தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளார். அரசியல் மோசடி செய்துள்ளார்.
நான் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக இருந்து 23 தீர்மானங்களை செயல்படுத்த முற்பட்ட போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனைத்தையும் மேடையிலேயே ரத்து செய்வதாக சொல்லிவிட்டு சென்றார்.
பொதுக்குழு கூட்டத்தில் என் மீது தண்ணீர் பாட்டிலை வீசி ரவுடிகள் மூலம் அட்டூழியம் செய்தனர். அனைத்தையும் செய்து தன்னைத்தானே பொதுச்செயலாளராக பழனிசாமி அறிவித்துக் கொண்டார்.
எந்த தகுதியும் இல்லாத அரசியல்வாதியாக பிரசாரம் செய்கிறார். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட வேண்டும் என்றார்.
