கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நான்கு இடங்களில் தவெக தலைவர் விஜய், பிரசாரம் செய்ய கடும் நிபந்தனைகளுடன்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நான்கு இடங்களில் தவெக தலைவர் விஜய், பிரசாரம் செய்ய கடும் நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய, 9 சட்டசபை தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அவர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் ஏப்.9ம் மாவட்டத்திலுள்ள நான்கு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு எஸ்.பி.,அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர்.

ஆனால், அந்தந்த காவல் நிலைய எல்லைப்பகுதியில் அனுமதி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் நான்கு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள கடும் நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏப்.9ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணிக்குள்ளும், வடலுாரில் நண்பகல் 12:00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள்ளும், பங்கேற்போர் எண்ணிக்கை 2 ஆயிரம் பேருக்கு மிகாமலும், குடிநீர், மருத்துவ வசதி, தீயணைப்பு உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உட்பட 21 நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சேத்தியாதோப்பில் மதியம் 2:00மணி முதல் மாலை 6:00 மணிக்குள்ளாகவும், ராமநத்தத்தில் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணிக்குள்ளும், பங்கேற்போர் எண்ணிக்கை, 500 பேருக்கு மிகாமலும் தேர்தல் விதிகளை பின்பற்றி பிரசாரம் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உட்பட 16 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும், அசம்பாவிதம் ஏற்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு உள்ளிட்ட நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக கடலுாருக்கு ஹெலிகாப்டர் மூலம் வருவதற்கு த.வெ.க.,சார்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Source link