கோவாவில் கடந்த ஆண்டு நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, நிறைவு நாளில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், அரங்கில் அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டியிடம் காந்தாரா படத்தில் வரும் காட்சியை ஜாலியாக நடித்துக் காண்பித்தார். பின்பு மேடையில் பேசிய அவர், “காந்தாரப் படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷெப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு…” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை செய்து காண்பித்தார். இது சர்ச்சையை உருவாக்கியது.
அவர் பெண் ஆவி என்று பேசியதும் முகபாவனை செய்ததும் துளு நாடு மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தது. அது பெண் ஆவி இல்லை பெண் கடவுள் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாகவும் கூறினர். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கேட்டு வந்தனர். இதையடுத்து ரன்வீர் சிங், நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் எப்போதும் மதிப்பதாக தனது சமூக வலைதள பக்கம் மூலம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரன்வீர் சிங் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதி எம். நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் தரப்பில், “ரன்வீர் சிங்கின் மன்னிப்பு மனப்பூர்வமான மன்னிப்பு அல்ல. ஏனெனில் அவர் தனது மேலாளர்களால் நடத்தப்படும் சமூக வலைதளக் கணக்கில் இருந்து மன்னிப்புக் கோரினார். அதனால் ரன்வீர் சிங் நேரில் வந்து மன்னிப்பு கோர வேண்டும். அதோடு அவர் கோவிலுக்குச் சென்று வாய்மொழியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “ரன்வீர் செய்த செயல் சரியானது அல்ல. அவரிடம் ஒருவித மன வருத்தம் இருக்க வேண்டும். ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது, அதை சரி செய்ய ரன்வீர் சிங் கோவிலுக்குச் சென்றுதான் ஆக வேண்டும்” எனக் கூறினார். இதையடுத்து ரன்வீர் சிங் தரப்பில், “இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறோம். மேலும் சாமுண்டி கோவிலுக்கு நேரில் சென்று வழிபடுகிறோம்” எனத் தெரிவித்தார். இதையடுத்து இவ்வழக்கை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
