கட்சித் தலைவரின் தவறுகள்; திட்டித்தீர்த்தார் சபாநாயகர்: அத்தனையும் 'ஆப் தி ரெக்கார்டு'

டில்லியில் அரசியல்வாதிகள் தொடர்பான செய்தி சேகரிப்பது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். தமிழகத்திலோ அல்லது வேறு மாநிலங்களிலோ உள்ள அரசியல் போல இல்லாமல் டில்லியில் அரசியல்வாதிகள் நட்பாக பழகுவர்.

காலை டிபனுக்கு வீட்டுக்கு வாங்க என அழைத்து பல செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொள்வர். ஆனால் அனைத்தையும் பிரசுரிக்க முடியாது. அதே சமயம் அவருடைய கட்சியில் என்ன நடக்கிறது என்பது நமக்கு புரியும். சில சமயம் நம்முடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூட கேட்பர்.

கடுமையாக விமர்சித்து எழுதினாலும் டில்லி அரசியல்வாதிகள் கவலைப்பட மாட்டர். என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்… அதில் என்னுடைய கருத்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்வர். நம்ம ஊர் போல பொய் கேஸ் போடுவதோ மிரட்டுவதோ டில்லியில் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சி தலைவர்களுடன் நன்றாக பழகுவர். அவர்கள் வீட்டு திருமணம் உட்பட சுப காரியங்களிலும் கலந்துகொள்வர்.

தமிழக அரசியல்வாதிகள் டில்லியில் வட இந்திய அரசியல்வாதிகள் பழக்கத்தை பின்பற்றுவர். தமிழகம் வந்தால் நிலைமை மாறிவிடும்.

தமிழக சட்டசபை சபாநாயகர் ஒரு சமயம் டில்லி வந்திருந்தார். அவரை எனக்கு சுத்தமாகத் தெரியாது. பேசியதும் இல்லை. இருப்பினும் போன் செய்து பார்ப்போமே என தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவரை சந்திக்க நேரம் கேட்டேன். உடனே வாருங்கள் என அழைத்தார். எனக்கு ஆச்சர்யம். மாலை நேரம் அவரைச் சந்தித்தேன். திருநீறு, குங்குமம் என பக்திமானாக இருந்தார். என்னதான் திராவிடக்கட்சியில் இருந்தாலும் அவர் தன் பக்தி கொள்கையில் இருந்து விலகியதில்லை.

அவருடைய கட்சி தலைவரைப் பற்றி கண்டபடி திட்டி பேசினார். அவர் செய்த பல தவறுகளையும் விவரமாக சொன்னார். எனக்கோ அதிர்ச்சி. முன் பின் தெரியாத என்னிடம் இப்படி அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறாரே என்று. அவரிடமிருந்து விடைபெறும் போது, ‘எல்லாம் ஆப் தி ரெக்கார்ட்’ என எச்சரித்தார். பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அரசியல்வாதியின் அழைப்பு

அந்த தமிழக அரசியல் பிரமுகர் மிகவும் பிரபலமானவர். ஓரிரண்டு தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தொகுதியில் அவருக்கு நல்ல மதிப்பு மரியாதை. மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். தேர்தல் சக்தி வாய்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் டில்லியில் இருந்தால் என்னையும் இன்னொரு சீனியர் பத்திரிகையாளரையும் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ அழைப்பார்.

கட்சியில் நடப்பது, தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என பல விஷயங்களை ஆப் தி ரெக்கார்டு ஆக பேசுவார். எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். எதையும் பிரசுரிக்க முடியாது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் வெளியே பேசுவது ஒன்று, அவர்கள் பின்பற்றுவது வேறு என்பது இவருடைய பேச்சிலிருந்து நன்றாக புரிந்து கொள்ள முடியும். ஒரு நாள் அவரிடமிருந்து போன். நீங்களும் நண்பரும் இன்றைக்கு மாலை வீட்டிற்கு வர முடியுமா என்றார். “நிச்சயம் வருகிறோம்” என்றேன்.

அதிமுக ஒத்து வராது

டில்லியில் பார்லிமென்டுக்கு மிகவும் பக்கத்தில் உள்ள அந்த பிரமுகரின் அரசு பங்களாவிற்கு சென்றோம்.முகப்பில் பெரிய தோட்டம். உள்ளே போனோம். “வாங்க…வாங்க” என வரவேற்றார். காபி, காரம் என சம்பிரதாயங்கள் முடிந்ததும் “என்ன நடக்குது நம்ம கட்சியில” என விசாரித்தார். “என்ன சார் இது, உங்க கட்சியில என்ன நடக்குதுன்னு நீங்க சொல்வீங்கன்னு நாங்க வந்திருக்கோம்…ஆனால் எங்ககிட்ட இதைக் கேட்கிறீர்களே” என்றோம். “கட்சியில என்ன நடக்குதுன்னே தெரியல” என்றார் அவர்.

அவர் சொன்னது உண்மைதான். அவர் இருந்தது தேசிய கட்சியில். டில்லியில் நடைபெறும் கட்சி கூட்டங்களில் அதிக பட்சம் ஹிந்தியில்தான் பேசுவர். சில தலைவர்கள் கிசுகிசு பேசும் போது ஹிந்தியில் பேசுவதால் இவருக்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டிலிருந்து யார் அமைச்சராக இருந்தாலும் இந்த பிரச்னைதான். இவருக்கோ ஹிந்தி தெரியாது…ஆங்கிலத்தில் பேசினாலும் வேகமாக மற்றவர்கள் பேசும் போது புரிந்து கொள்வது கடினம்.

“இந்த கட்சி உங்களை நன்றாக வைத்துள்ளதே…எம்பி பதவி கொடுத்தார்கள், மந்திரி பதவி கூட கொடுத்தார்களே” என்றோம். “எல்லாம் சரிதான். ஆனா நம்ம ஊர் கட்சியில் இருக்கிற ஒரு பீலிங்கே தனிதான்” என்றார் அவர். வேறு கட்சிக்கு மாறுவது பற்றிய யோசனையில் அவர் இருப்பது எங்களுக்கு புரிந்தது. எங்கள் கருத்தை கேட்கத்தான் அழைத்திருக்கிறார். “நீங்க ஏற்கெனவே இருந்த அதிமுகவில் சேரலாமே” என்றோம் நாங்கள்.

ஒரு நொடி எங்களைப் பார்த்து புன்னகைத்தார். “அதிமுகவில சேருவது பிரச்னை. அது நமக்கு ஒத்துவராது” என்று திட்டவட்டமாக கூறினார்.

அந்த அம்மா ஓரம் கட்டிடுவாங்க

எங்களுக்கு ஆச்சர்யம். “நீங்க ஏற்கெனவே இருந்த கட்சிதானே…அங்கே அமைச்சராகவும் இருந்திருக்கிறீர்கள்”. என்று கேட்டோம். “எல்லாம் சரிதான். அப்ப எம்.ஜி.ஆர் இருந்தார். ஆனா இப்ப நிலைமை வேற “ என்றார் அவர்.

“அப்படி என்ன நிலைமை மாறிப் போச்சு? கட்சியில சேர்த்துக்க மாட்டாங்களா” என சந்தேகமாக கேட்டோம். “கட்சியில் சேர்வதில் எந்த பிரச்னையும் இருக்காது.”

“வேற என்னதான் பிரச்னை?” “என்னை அந்த அம்மாவிற்கு பிடிக்காது. கட்சியில சேர்த்துட்டு பின்னாடி என்னை ஓரங்கட்டுவாங்க. எந்த பதவியும் இல்லாமல் சும்மா இருக்க வேண்டியதுதான்” என சலிப்போடு சொன்னார்.இன்னொரு தேசிய கட்சியின் பெயரைச் சொல்லி அங்கு சேரலாமா என கேட்டார். “அந்த கட்சியிலயா?” நாங்கள் ஆச்சர்யப்பட்டோம். “கோஷ்டிக்கு பேர் போன கட்சி அது…அங்க உங்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கும்? அந்த கட்சியின் எதிர்காலமே கேள்விக் குறியாக இருக்கும் போது உங்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கப் போகிறது?’ என ஆவலோடு கேட்டோம்.

“அந்த கட்சியில சுதந்திரமா இருக்கலாம். என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மத்த இரண்டு கட்சிகளிலும் வாய் திறக்க முடியாது” என்றார் அவர். “அப்ப அந்த கட்சியில் சேருவது என முடிவு செய்துவிட்டீர்களா?” என்று அதிர்ச்சி நீங்காதவர்களாக கேட்டோம். “இன்னும் இல்லை…அதுக்கு முன்னாடி உங்க கருத்தைக் கேட்கத்தான் கூப்பிட்டேன்” என்று உண்மையை கூறினார் அவர். “எந்த கட்சியில் சேருவது என்பது உங்களுடைய முடிவு… எதையும் நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள்,” என்று சொல்லிவிட்டு வந்தோம்.

கடைசியில் அந்த பிரமுகர் அவர் தேர்ந்தெடுத்த தேசிய கட்சியில் இணைந்தார். சில காலம் பதவியிலும் இருந்தார். பிறகு அடுத்த பார்லி தேர்தலில் வெற்றி பெற்று எம்பியும் ஆனார். ஆனால் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

1. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த சபாநாயகர் யார், எந்த கட்சி என்று கமென்ட் செய்து சொல்லுங்கள் வாசகர்களே!

2. எந்தக் கட்சியில் சேரலாம் என்று செய்தியாளர்களிடம் ஆலோசனை கேட்ட அந்த அரசியல் கட்சி தலைவர் யாராக இருக்கும் என்று கமென்ட் செய்து சொல்லுங்கள் வாசகர்களே!

– அ.வைத்தியநாதன்

Image 1543184

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

இந்தத் தொடரின் அடுத்த கட்டுரை மார்ச் 5ம் தேதி வியாழக்கிழமை காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம்) வெளியாகும்.

Source link