கட்சி ஆபீசை காலி செய்வதில் இருந்து காங்கிரசுக்கு தற்காலிக நிவாரணம்

புதுடில்லி: டில்லியில், அக்பர் சாலையில், 1978 முதல் செயல்படும் கட்சி அலுவலகத்தை இன்றைக்குள் காலி செய்யும்படி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் காங்கிரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அக்கட்சிக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.

தலைநகர் டில்லியில், எண். 24, அக்பர் சாலை என்ற முகவரியில், 1978 முதல் காங்., தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. நிர்வாக மற்றும் இட வசதிக்காக, 2025 ஜனவரியில், ஐ.டி.ஓ., என்ற பகுதியில், காங்., தலைமை அலுவலகம் மாற்றப்பட்டது.

இதற்கு, ‘இந்திரா பவன்’ என, பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அலுவலகத்தில் தான் கட்சியின் அனைத்து பணிகளும் நடக்கின்றன.

‘சென்டிமென்ட்’

கட்சியின் அடையாளம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் கருதி, அக்பர் சாலையில் செயல்படும் கட்சி அலுவலக முகவரியை, காங்., தலைமை பயன்படுத்தி வருகிறது.

இதற்கு மாதந்தோறும் வாடகையும் செலுத்தி வருகிறது. இந்த அலுவலகத்தை காங்., மிகவும், ‘சென்டிமென்ட்’ ஆக பார்க்கிறது.

புதிய அலுவலகத்துக்கு இடம் பெயர்ந்து விட்டதால், அக்பர் சாலையில் செயல்படும் கட்சி அலுவலகத்தை, இன்றைக்குள் காலி செய்யும்படி, சமீபத்தில் காங்கிரசுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

இதே போல், எண். 5, ரைசினா சாலையில் இயங்கும், காங்., இளைஞரணி அலுவலகத்தையும் காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அக்பர் சாலையில் செயல்படும் கட்சி அலுவலகத்தை காலி செய்வதற்கான காலக்கெடு இன்று முடிவடையும் நிலையில், அதிலிருந்து காங்கிரசுக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.

காங்., மூத்த தலைவர்கள் மத்திய அரசுடன் நடத்திய திரைமறைவு பேச்சுகளுக்கு பின், இந்த நிவாரணம் கிடைத்துள்ளது.

இடைக்கால ஏற்பாடு

இதன் மூலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த அலுவலகத்தை காங்., தன்வசம் வைத்திருக்க முடியும். காங்., மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், அஜய் மாகன் ஆகியோர், மத்திய அரசுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தியதாக சொல்லப்படுகிறது.

அரசு இல்லங்களுக்கு தகுதியுள்ள முன்னாள் முதல்வர்கள் அசோக் கெலாட், சரண்ஜித் சிங் சன்னி, திக்விஜய் சிங், கமல்நாத் போன்றோருக்கு, லுத்யன் பகுதியில் மாற்று இடங்களை காங்., ஆராய்ந்து வருகிறது. அவர்களுக்கு இல்லங்கள் ஒதுக்கப்பட்டவுடன், இடைக்கால ஏற்பாடாக அந்த இல்லங்களில் ஒன்றிலிருந்து கட்சி அலுவலகத்தை இயக்கவும் காங்., முடிவு செய்துள்ளது.

அதே சமயம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் நோட்டீசுக்கு எதிராக, நீதிமன்றத்தை நாடவும் காங்., முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான பணிகளில், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Source link