பஞ்ச புராணம் :
சைவ சமயத்தில் சிவ வழிபாட்டில் ஈசனுக்கு பஞ்சபுராணம் பாடும் வழக்கம் உள்ளது. இதை நாம் அனைத்து சிவாலயங்களிலும் கண்டிருப்போம். பஞ்சபுராணம் என்பது பன்னிரு திருமுறைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படக் கூடிய
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5. பெரிய புராணம்
ஆகிய பாடல்களில் இருந்து ஒவ்வொரு பாடல்களை எடுத்து ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் பாடுவது ஆகும். தினமும் பன்னிரு திருமுறைகளையும் முழுமையாக ஓத முடியாதவர்கள், இந்த ஐந்து நூல்களிலிருந்தும் தலா ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவது வழக்கமாகும்.
இது போல் முருகப்பெருமானின் உடைய கௌமார சமய வழிபாட்டில் முருகப்பெருமானுக்கும் பஞ்சபுராணம் பாடும் பழக்கம் தற்போது அடியார் பெருமக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகப்பெருமானின் பஞ்சபுராணம் என்ன என்பதை பற்றி விளக்குகிறார் சிதம்பரம் ஆலய அர்ச்சகர், ஜோதிடர் எம்.சிவராஜன் அவர்கள்.
முருகன் கோவில்களிலும் பக்தர்கள் பலர் மேலே குறிப்பிடப்பட்ட சிவனுக்குரிய பஞ்சபுராணங்களை ஓதுவது உண்டு. சிவனும், முருகனும் ஒன்றே என்று கருதப்படுவதால் சிவனுக்குரிய வழிபாட்டு முறைகள், பாடல்கள் முருகனுக்கும் பாடப்படுவது சில மரபுகளில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இது தவிர முருகப் பெருமானுக்கு என்றும் தனியாக பஞ்சபுராணங்கள் பாடப்படுகின்றன.
முருகன் பஞ்சபுராணம் :
1. திருமுருகாற்றுப்படை,
2. திருப்புகழ்,
3. கந்தர் அலங்காரம்
4. கந்தர் அனுபூதி
5. பிள்ளைத்தமிழ்
ஆகிய பாடல்களில் இருந்து ஒவ்வொரு பாடல்களை எடுத்து பஞ்சபுராணமாக பாடும் வழக்கம் தற்பொழுது முருக வழிபாட்டில் முருகன் அடியார்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது வரக்கூடிய மஹா கந்த சஷ்டி திருவிழா ஏழு நாட்களில் முருகப்பெருமானுக்கு உடைய இந்த பஞ்சபுராண பாடல்களை தினமும் நமது இல்லங்களிலும், ஆலயத்திலும் பாடுவது முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கான சிறந்த வழியாகும்.
முருகன் பஞ்ச புராண பலன்கள் :
கஷ்டங்கள், கவலைகள் தீருவதற்காக முருகனின் இந்த பஞ்சபுராணங்கள் பாடப்படுகிறது. அதோடு நினைத்த காரியங்கள் நிறைவேறவும், முருகனின் அருளை பெறவும் இந்த பஞ்சபுராணத்தை கந்தசஷ்டி விரத காலம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பாடுவது சிறப்பு. முருகனுக்குரிய ஐந்து புராணங்களில் இருந்து, தலா ஒரு பாடலை தினமும் தேர்வு செய்து அவற்றை பாடலாம். அல்லது நம்முடைய பிரச்சனைகளுக்குரிய பாடல்களை தேர்வு செய்து பாடலாம். இதனால் முருகனின் அருளால் நம்முடைய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பஞ்சபுராணம் பாடினால் கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
– இந்த கட்டுரையை வழங்கியவர்
M.சிவராஜன்,
ஸ்ரீ கணபதி ஜோதிட நிலையம்,
சிதம்பரம்.
மொபைல் எண் : 8675441071
