படக்குறிப்பு, கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த அழகு ரதிகட்டுரை தகவல்
தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமிபுரத்தில் கடல் அரிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏராளமான பனை மரங்கள், சுடுகாடு மற்றும் கல்லறைகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், தங்கள் வாழ்விடத்தையும் தொழிலையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலோரப் பகுதிகளை பாதுகாக்கவே பயோஷீல்டு திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அமைந்துள்ளது கந்தசாமிபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில், பனைத் தொழில் நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடல் அரிப்பால் கடற்கரையோர நிலப்பரப்பு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், முன்பு தங்களது குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் இருந்த கடல் தற்போது ஊருக்கு மிக அருகில் வந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு காலத்தில் பனை மரங்கள், தென்னை மரங்கள், விவசாய நிலங்கள், கிணறுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களுடன் காணப்பட்ட இப்பகுதி, தற்போது அவற்றை ஒவ்வொன்றாக இழந்து வருவதாகவும் மக்கள் கவலை எழுப்பியுள்ளனர்.
‘கிராமமே இல்லாமல் போய்விடுமோ என அச்சமாக இருக்கிறது’
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த அழகு ரதி, ”நான் கந்தசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவள். இந்த ஊரில் ஐந்து, ஆறு தலைமுறைகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். பலர் 35 முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
பனை மரங்களை வைத்து தான் எங்களுடைய வாழ்க்கை. எங்களுடைய முக்கியத் தொழிலே பனைத் தொழில் தான். கடல் நீர் உள்ளே வந்து வெளியே செல்லும் போது கடல் அரிப்பு ஏற்பட்டு ஏராளமான பனை மரங்கள் அழிந்துவிட்டன. மயானப் பகுதிகளும் கடலுக்குள் சென்று விட்டன.” என்கிறார்.
தற்போது கடல் அலைகள் ஊருக்குள் அதிகமாக வந்து செல்வதால் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறும் அவர், “கடல் அரிப்பால் நாங்கள் பெரும் பாதிப்பையும் மன உளைச்சலையும் சந்தித்து வருகிறோம். எந்த நேரத்தில் கடல் ஊருக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம்.
எங்களுடைய காலத்தில் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய பிள்ளைகள் காலத்தில் இந்தக் கிராமம் அடியோடு அழிந்து போய்விடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது.” என்றும் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, குடிநீர் வசதியும் போதுமானதாக இல்லை. கடல் அருகில் இருப்பதால் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் உப்பு நீர்தான் கிடைக்கிறது.
கடல் நீர் எந்த நேரத்தில் ஊருக்குள் புகுந்துவிடும் என்று சொல்ல முடியாத நிலை உள்ளது என்கிறார் அழகு ரதி.
இது பற்றி மேலும் விளக்கிப் பேசிய அவர், “முன்பு இப்பகுதியிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை இருந்தது. அந்தப் பகுதியில் சுடுகாடும் ஏராளமான பனை மரங்களும் இருந்தன. தற்போது கடல் அரிப்பால் அந்த நிலப்பரப்புகள் அழிந்துவிட்டன. கணக்கிட முடியாத அளவுக்கு ஏராளமான பனை மரங்களும் கடலுக்குள் சென்றுவிட்டன. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், கடல் நீர் ஊருக்குள் புகுந்து, இந்தக் கிராமம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும்.’ என்றார்.
’20-க்கும் மேற்பட்ட கல்லறைகள் கடலுக்குள் சென்றுவிட்டன’

கடல் அரிப்பால் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி, தங்களது முன்னோர்களின் நினைவிடங்களும் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், ”எங்கள் பகுதியில் இருந்த ஏராளமான கல்லறைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. அவற்றைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், இங்குள்ள அனைத்து கல்லறைகளும் கடலுக்குள் சென்று விடுமோ என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட கல்லறைகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு கடலுக்குள் சென்று விட்டன.
இப்போது எஞ்சியுள்ள கல்லறைகளையாவது நாங்கள் பாதுகாக்க வேண்டும். அவையும் கடலுக்குள் செல்லும் அபாயத்தில் உள்ளன. எனவே, அரசாங்கம் இதைக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்களுடைய வாழ்வாதாரமாக இருக்கும் பனை மரங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பனைத் தொழில் தான் எங்களுடைய பாரம்பரியத் தொழில். எனவே, எங்களுடைய வாழ்வாதாரத்தையும் பனை மரங்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
‘கிணறுகள், தென்னை மரங்கள், எல்லாம் அழிந்துவிட்டன’

கந்தசாமிபுரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் யசோதாவும் கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நினைத்து கவலை தெரிவிக்கிறார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” முன்பெல்லாம் கடலுக்கு அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து குடித்தோம். அங்கு கிணறுகள் எல்லாம் இருந்தன. ஆனால் இப்போது அவை இல்லை. எல்லாம் அழிந்து போய்விட்டன. சுடுகாடு எங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. இப்போது அதுவும் அழிந்துவிட்டது.
பனை மரங்களை வைத்துத்தான் எங்களுக்குத் தொழில். பனை மரங்களும் இல்லாமல் போய்விட்டால், எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் கிடையாது. அதற்குப் பிறகு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை.” என்றார்.
கடல் நாளுக்கு நாள் எங்கள் குடியிருப்புப் பகுதியை நோக்கி வருகிறது என்று கூறும் அவர், சில நேரங்களில் மிக விரைவாகக் கடல் நீர் முன்னேறி வந்துவிடுகிறது என்றும் தெரிவிக்கிறார்.
கடல் ஊருக்குள் வந்துவிடுமோ என்ற பயம் இருப்பதால் குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
“எங்கள் அம்மா, தாத்தா, பாட்டி என அனைவரும் இங்கேயே வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த இடங்கள் இப்படி மாறிவிட்டதை நினைக்கும்போது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.”
‘கடல் அரிப்பை தடுக்க பயோஷீல்டு திட்டம்’

கந்தசாமிபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் அரிப்பால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
“தூத்துக்குடி மாவட்டத்தில் 120 கிலோமீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது. தேசிய கடற்கரை ஆய்வு அறிக்கையின்படி, வேம்பார் உள்ளிட்ட வடக்குப் பகுதிகளில் அதிக கடல் அரிப்பு பதிவாகியுள்ளது. தெற்குப் பகுதியில் குலசேகரப்பட்டினம், மணப்பாடு உள்ளிட்ட இடங்களில் மிதமான கடல் அரிப்பு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.” எனார் அவர்.
கடந்த ஆண்டு சில இடங்களில் கடல் அரிப்பு ஏற்படுவதாகவும், பனை மரங்கள் வேரோடு சாய்ந்து பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் மற்றும் புகைப்படங்கள் வந்ததாக இளையராஜா குறிப்பிடுகிறார்.
அவரது கூற்றுப்படி, குலசேகரப்பட்டினத்தில் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு சுமார் ரூ.3 கோடி செலவில் பயோ ஷீல்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக மேலும் விளக்கிப் பேசிய அவர், “இத்திட்டத்தில் சவுக்கு, பனை, பூவரசு, முந்திரி உள்ளிட்ட அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், உள்ளூர் தாவர வகையான இராவணன் மீசை பயன்படுத்திக் கடற்கரையின் முன்பகுதியில் இயற்கையான பாதுகாப்பு அரணை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாதிரி வெற்றிகரமான திட்டமாக உருவெடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு பயோஷீல்டு திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளின் நிலங்களில் சுமார் 50 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 40 ஹெக்டேர் பரப்பளவில் இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு பெறுவதற்கான முன்மொழிவு அளிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
கொம்புத்துறை பகுதியில் நீண்ட கடற்கரை நிலப்பரப்பு கிடைப்பதால், சுமார் 25 ஹெக்டேர் பரப்பளவில் பயோ ஷீல்டு திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
மேலும் அவர், “கந்தசாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் கடல் அரிப்பு அதிகமாக இருப்பதாக மக்கள் கருதினால், உடனடியாக எங்களைத் தொடர்புகொள்ளலாம். அத்தகைய இடங்களில் சவுக்கு மரங்களை நட்டு, கடற்கரை அரிப்பை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்த தயாராக உள்ளோம்.” என்றார்.
பனை மரங்கள் வேரோடு சாய்ந்து பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்து கந்தசாமிபுரம் பகுதி மீனவர்களிடமும் பணியாளர்களிடமும் விசாரித்ததாக குறிப்பிடும் அவர் இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
“கடற்கரையில் காணப்படும் மணல் திட்டுகள் இயற்கையான பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் கடலோர இயற்கை அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களும் கடல் அரிப்புக்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும், குறிப்பிட்ட சில இடங்களில் கடல் அரிப்பு ஏன் அதிகமாக ஏற்படுகிறது என்பதை கண்டறிய விரிவான அறிவியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.” என்றார்.
‘மணல் நகர்வில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியக் காரணமாக இருக்கலாம்’
கடல் அரிப்புக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கடல்சார் விஞ்ஞானி டாக்டர் கிளாட்வின், ”மன்னார் வளைகுடா பகுதியைப் பொறுத்தவரை, குறிப்பாக தென் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே கடல் அரிப்பு ஏற்படுவதை பார்க்கிறோம். இதற்கு முக்கியக் காரணமாக இந்தப் பகுதியில் நடைபெறும் மணல் படிவுகளின் நகர்வு இருக்கலாம்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மன்னார் வளைகுடா பகுதிக்கு அருகில் பாக் கடல் பகுதி உள்ளது. ஆண்டுக்கு சுமார் எட்டு மாதங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள கடலோர மணலை, கடல் நீரோட்டம் மற்றும் அலைகள் பாக் கடல் பகுதி நோக்கி நகர்த்துகின்றன. அதாவது, தென் தமிழ்நாட்டில் இருந்து வடக்கு நோக்கி மணல் நகர்கிறது. மீதமுள்ள நான்கு மாதங்களில் பாக் கடல் பகுதியில் இருந்து மணல் மீண்டும் மன்னார் வளைகுடா பகுதிக்குத் திரும்புகிறது.
இந்த இயற்கையான செயல்முறையில் தற்போது உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் மணல் நகர்வில் சமநிலையின்மை உருவாகிறது. அடிக்கடி கடலில் ஏற்படும் சீற்றங்கள், கடல் நீரோட்டத்தின் போக்கில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அலைகளின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மணல் நகர்வில் ஏற்படும் இந்தச் சமநிலையின்மை கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே கடல் அரிப்பு அதிகரிப்பதற்கும், புதிதாகக் கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் முக்கியக் காரணமாக இருக்கலாம்.
எனவே, இந்தப் பகுதிகளில் கடல் நீரோட்டம், மணல் நகர்வு மற்றும் அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவான அறிவியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், கடலோரப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை அமைத்து, கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.” என்றார்.
இயற்கையான பாதுகாப்பு அரண்களும் செயற்கை கட்டமைப்புகளும்

கடலோரப் பகுதிகளை பாதுகாப்பதற்கு இயற்கையான கட்டமைப்புகள் மற்றும் செயற்கையான கட்டமைப்புகள் என இரு வகையான வழிமுறைகளைப் பயன்படுத்தலாம் என கடல்சார் விஞ்ஞானி கிளாட்வின் குறிப்பிட்டார்.
அதை விளக்கிப் பேசிய அவர், “இயற்கையான கட்டமைப்புகளில் பயோ ஷீல்டு திட்டம் முக்கியமானது. இதன் ஒரு பகுதியாக, கடலோரத்தில் உயர் அலை மற்றும் தாழ் அலை பகுதிகளில் வளரக்கூடிய அலையாத்தி மரங்கள் வளர்க்கலாம். அதேபோல், கடலோர மணல் திட்டுகளில் பனை மரங்கள் மற்றும் சவுக்கு மரங்களை வளர்க்கலாம்.
செயற்கையான கட்டமைப்புகளை பொறுத்தவரை, கான்கிரீட் கட்டமைப்புகளை அமைக்கலாம். மேலும், ஜியோ டெக்ஸ்டைல் மெம்பிரேன்கள் என்பது சிவில் இன்ஜினியரிங், கட்டுமானம் மற்றும் விவசாயத்தில் நிலத்தடி மண்ணை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு வகையான செயற்கை துணி ஆகும். எனவே அது போன்ற பொருட்களைப் பயன்படுத்தி மென்மையான கடலோரப் பாதுகாப்புக் கட்டமைப்புகளையும் உருவாக்கலாம்.
எனினும், ஒவ்வொரு கடலோரப் பகுதியில் நிலவும் சூழலுக்கு ஏற்ப அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, பொருத்தமான இயற்கை அல்லது செயற்கை பாதுகாப்புக் கட்டமைப்புகளை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் கடலோரப் பகுதிகளில் ஏற்படும் கடல் அரிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ள முடியும்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




