டில்லி: ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய எமிரேட்ஸ் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பைக்கான, ‘டி’ பிரிவு லீக் போட்டியில் ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த கனடா அணிக்கு கேப்டன் தில்பிரீத் பஜ்வா (11), யுவராஜ் சாம்ரா (5), நிக்கோலஸ் கிர்டன் (4) ஏமாற்றினர். பின் இணைந்த நவ்னீத் தலிவால் (34), ஹர்ஷ் தாக்கர் (50) ஜோடி ஆறுதல் தந்தது. ஷ்ரேயஸ் மோவா (21) ஓரளவு கைகொடுத்தார்.
கனடா அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்தது. எமிரேட்ஸ் சார்பில் ஜுனைடு சித்திக் 5 விக்கெட் சாய்த்தார்.
ஆர்யன்ஷ் அரைசதம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய எமிரேட்ஸ் அணிக்கு கேப்டன் முகமது வாசீம் (4), அலிஷான் ஷரபு (5), மயங்க் குமார் (4), ஹர்ஷித் கவுசிக் (5) ஏமாற்றினர். பின் இணைந்த ஆர்யன்ஷ் சர்மா, சோயிப் கான் ஜோடி கைகொடுத்தது. அன்ஷ் படேல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஆர்யன்ஷ், 41 பந்தில் அரைசதம் கடந்தார். திலான் வீசிய 17வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சோயிப், 28 பந்தில் அரைசதம் கடந்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. ஜஸ்கரன் சிங் வீசிய 20வது ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஆர்யன்ஷ், 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் சோயிப் கான் (51) அவுட்டானார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்த ஆர்யன்ஷ் வெற்றியை உறுதி செய்தார்.
எமிரேட்ஸ் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 151 ரன் எடுத்து, முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆர்யன்ஷ் (74), அர்பான் (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ஜுனைடு சித்திக் வென்றார்.
