கனிமொழியால் உதயநிதிக்கு இடையூறா? தெரியாது என்கிறார் அமைச்சர் துரைமுருகன்

காட்பாடி: ‘அ.தி.மு.க., ஆட்சிக்கு வரப்போவதில்லை. அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதி, வெறும் வெத்து வேட்டு தான்,’ என தி.மு.க., பொதுச்செயலரான அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்தார்.

வேலுார் மாவட்டம், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி: பிரிட்ஜ் வழங்குவது உள்ளிட்ட அ.தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றி கேட்கிறீர்கள். தேர்தலில், இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுவது, சில கட்சிகளுக்கு வாடிக்கை. ஏற்கனவே, தி.மு.க., அரசு, அதிக அளவில் கடன் வாங்கியதாக கூறும் நிலையில், அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியால், மேலும் கடன் அதிகரிக்குமா என கேட்கிறீர்கள்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் தான், இப்படியெல்லாம் அள்ளி விடுகிறார்கள். அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி வெறும் வெத்து வேட்டு தான். தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, மாநில அரசியலுக்கு வந்தால் துணை முதல்வர் உதயநிதிக்கு இடையூறு ஏற்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

எனக்கு அதற்கெல்லாம் பதில் தெரியாது. தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை பற்றி கூற, அந்த குழுவில் இல்லை. தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, தொகுதி பங்கீட்டில் இழுப்பறி நீடித்த நிலையில், தே.மு.தி.க.,விற்கு உடனடியாக தொகுதி பங்கீடு முடிந்ததாக விமர்சிக்கின்றனர். தொகுதி பங்கீட்டில், வி.சி.க., தலைவர் திருமாவளவனுக்கு வருத்தம் கிடையாது. மகிழ்ச்சியாகவே சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.

‘காட்பாடி வேட்பாளர் என சொல்லாதீர்’

தி.மு.க.,வின், வேலுார் வடக்கு மாவட்ட தேர்தல் அலுவலகத்தை, திறந்து வைத்து துரைமுருகன் பேசியதாவது: காட்பாடி தொகுதியின், தி.மு.க., வேட்பாளர், நான் தான் என சொல்லாதீர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், யார் பெயரை உச்சரிக்கிறாரோ, அவர் தான் வேட்பாளர். என்னை வேட்பாளர் என சொல்வதை கேட்க, எனக்கு அசவுகர்யமாக இருக்கிறது. இரவு 12 மணி வரை தேர்தல் பணிகளை ஸ்டாலின் கவனித்துக் கொண்டிருக்கிறார். கூட்டணியில், ஒவ்வொரு கட்சியாக அழைத்து சாதுரியமாக பேசி அனுப்புவதை பார்த்து வியக்கிறேன். அகில இந்திய கட்சிகளாக இருந்தாலும், அவர்களால் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியவில்லை. ஆனால் கமுக்கமாக இருந்து, முடிவெடுத்து ஒரு பெரிய கூட்டணியை வெற்றிகரமாக அமைத்திருப்பவர், ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் பேசினார்.

Source link