நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோரது உருவ பொம்மைகள் துாக்கில் தொங்க விடப்பட்டது, காங்., – பா.ஜ., இடையே மோதல் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் சிலை அருகே, ஒரு உருவ பொம்மையில் மோடி படம் ஒட்டப்பட்டு துாக்கில் தொங்க விடப்பட்டிருந்தது. கோட்டார் போலீசார் சென்று அதை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
இதையறிந்த பா.ஜ.,வினர், ‘மோடி உருவப் படத்தை துாக்கில் தொங்க விட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி, நாகர்கோவில் பா.ஜ., – எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். பின், கலைந்து சென்றனர்.
இதை தொடர்ந்து, நகர் காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் உட்பட 20 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நவீன்குமார் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை வடசேரி அருகே மின் கம்பத்தில் ராகுல் உருவப்படத்துடன் கூடிய ஒரு உருவ பொம்மையை துாக்கிலிட்ட பா.ஜ.,வினர், பிரதமர் மோடியை அவமதித்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போலீசார் சென்று உருவபொம்மையை கைப்பற்றினர்.
இது தொடர்பாக பா.ஜ., கவுன்சிலர் சுனில் குமார் உள்ளிட்டோர் மீது, காங்கிரசார் புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தேர்தல் நெருங்கும் நிலையில் உருவ பொம்மைகள் துாக்கிலிடப்பட்ட விவகாரம், காங்., – பா.ஜ., இடையே மோதல் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
