கன்னியாகுமரி: 'தமிழகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படும். டில்லியில் இருந்து ஆளப்படும் நிலை வரக்

கன்னியாகுமரி: ‘தமிழகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படும். டில்லியில் இருந்து ஆளப்படும் நிலை வரக் கூடாது,’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு அவர் பேசியதாவது; இந்திய துணைக்கண்டத்தின் துவக்கமான வள்ளுவர் முனை இருக்கும் குமரி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். தனித்துவமான பண்பாடு, உணவு, இயற்கை அழகு நிறைந்திருக்கும் மாவட்டம். என்எஸ் கிருஷ்ணன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற தலைவர்களை தந்த மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இஸ்ரோ அமைப்புக்கு எத்தனையோ தலைவர்களை தந்த மாவட்டம்.

2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீடுகள் கட்டிக் கொடுத்தாலும், அரசு நிலம் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. சொந்த வீடுகளில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு வரன்முறைபடுத்தப்பட்ட பட்டா இன்று வழங்கப்படுகிறது. வானியக்குடியில் ரூ.180 கோடியில் புதிய துறைமுகம். ரூ.253 கோடி மதிப்பில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது.

குமரிக்கு 6 புதிய அறிவிப்புகள்

கன்னியாகுமரி நகராட்சி குடிநீர் தேவையை நிறைவு செய்ய பழையாற்றில் இருந்து கூடுதல் நீர் வழங்க ரூ.28.25 கோடி மதிப்பில் புதிய திட்டம். முக்கடலும் சங்கமிக்கும் இந்தப் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும்
களியக்காவிளை சாலையை மேம்படுத்த ரூ.9 கோடி ஒதுக்கீடு
பழம்பெரும் தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம் ரூ.2 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்
மீனவர் நலவாரியம் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்
கடலில் மாயமாகும் மீனவர்களின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் வரையில், மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

ஆட்சிப் பொறுப்பை என்னிடம் வழங்கிய மக்களுக்காக என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன். தேர்தல் சமயத்தில் மட்டும் சிலர் உங்களை வட்டமடிப்பார்கள். பிரதமர் மோடி இன்னும் அடிக்கடி தமிழகம் வருவார். அவர் வருவதை நினைத்து கூட்டணி கட்சிகளே பயப்படுகிறார்கள். ஏனெனில் பிரதமர் எவ்வளவு முறை இங்கு வருகிறாரோ, அந்த அளவுக்கான வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி தோல்வியை அடையும். தமிழகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படும். டில்லியில் இருந்து ஆளப்படும் நிலை வரக் கூடாது. இதைத் தீர்மானிக்கக் கூடிய தேர்தல் தான் வருகிறது.

பாஜவினரிடம் நேரடியாக கேட்கிறேன், எப்போது தான் வன்முறையை விட்டு விட்டு வளர்ச்சியைப் பற்றி பேசுவீங்க. பிரிவினைவாதத்தையும், வெறுப்பையும் விதைக்கும் முயற்சியை நிறுத்திவிட்டு, தமிழகத்திற்கு நல்ல விஷயம் பற்றி பேசப் போறீங்க. தமிழகத்தை தொடர்ந்து குறை சொல்லி பேசுகிறீர்கள். அதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா? தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா?

இவங்களுக்கு கிடைத்த சரியான ஆள் தான் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். நாட்டு மக்களுக்கு ரூ.15 லட்சம் தருவோம் என்று வடை சுட்ட மாதிரி, இபிஎஸ் வாய்க்கு வந்த மாதிரி வடை சுட்டு வருகிறார். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.

Source link