கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கன்னியாகுமரியில் அ.தி.மு.க-வின் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ-வாக உள்ளார். நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தி, பத்மநாபபுரத்தில் தி.மு.க-வின் மனோ தங்கராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், பிரின்ஸ் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், விளவங்கோடு தொகுதியில் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார். கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க நாகர்கோவில், குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் போட்டியிட்டது. கிள்ளியூர் தொகுதியில் த.மா.க போட்டியிட்டது. வரும் சட்டசபைத் தேர்தலில் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய 4 தொகுதிகள் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படுவதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கிள்ளியூர் தொகுதி ஏற்கெனவே த.மா.க-வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் த.மா.க-வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி தவிர்த்து மீதமுள்ள 5 தொகுதிகளிலும் தாமரைச் சின்னம் போட்டியிட உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க போட்டியிட உள்ளது. இந்த முறை அ.தி.மு.க அதிக தொகுதிகளை குமரி மாவட்டத்தில் பெற வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினர் கூறி வந்தனர். அதன்படி குளச்சல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பச்சைமால் காய் நகர்த்தி வந்தார். பத்மநாபபுரம் தொகுதியில் அ.தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயசுதர்சன் போட்டியிடும் விதமாகப் பணி செய்துவந்தார். ஆனால் கன்னியாகுமரி தொகுதி மட்டுமே அ.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அ.தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பா.ஜ.க சார்பில் நாகர்கோவிலில் சிட்டிங் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி அல்லது மீனா தேவ் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. கிள்ளியூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப்பின் மகன் டாக்டர் நிவின் சைமன் போட்டியிட வாய்ப்பு உள்ளது. குளச்சல் தொகுதியில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கோபகுமார் அல்லது சிவகுமார் போட்டியிட வாய்ப்பு உள்ளது. பத்மநபபுரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அல்லது பாவானி எட்வின் ஜோஸ், மாவட்ட பொதுச்செயலாளர் வினோத் உள்ளிட்டோரில் ஒருவருக்கு சீட் வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
