தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிக்கு 5 தொகுதிகள், தேமுதிக 10 தொகுதிகள் என 66 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 7 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்ற கட்சியினர் போட்டியிடவுள்ளனர்.
இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன், இன்று அண்ணா அறிவாலயத்துக்கு வந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது நிலைப்பாடு குறித்து தெரிவித்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசனின் முடிவை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். ‘இது தியாகம் அல்ல, கடமை’ என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான்.
அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.ஒ அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
