கம்பி விலை டன்னுக்கு ரூ.10,000 திடீர் உயர்வு

சென்னை : கட்டுமான பணிக்கான டி.எம்.டி., கம்பி விலை டன்னுக்கு, 10,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டுமான பணிகளுக்கு, டி.எம்.டி., எனப்படும், முறுக்கு கம்பிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, அஸ்திவார துாண்கள் முதல் மேல் தளம் வரை, பல்வேறு நிலைகளில் கம்பிகளை பயன் படுத்தி , ‘கான் கிரீட்’ போடும் முறை பிரபலமாக உள்ளது.

அதிகரிப்பு

இதனால், கட்டடங்களில் கம்பிகளை பயன்படுத்த வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. பொதுவாக கட்டுமான பணிகளில், எட்டு மி.மீ., மற்றும் 10, 12, 16 மி.மீ., தடிமன்களில் உள்ள கம்பிகள் தான் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது, எட்டு மி.மீ., கம்பிகள் கட்டுமான பணிக்கு தவிர்க்கப்படுகின்றன.

தயாரிப்பு அடிப்படையில் கம்பிகள், ஏ, பி, சி என, மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. டாடா போன்ற பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கம்பிகள், ‘ஏ’ வகையை சேர்ந்தவை; இது, ஒரு டன், 56,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. கடந்த, 10 நாட்களில், அதன் விலை, 66,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கு அடுத்த நிலையில் உள்ள, ‘பி’ வகை கம்பி, ஒரு டன், 37,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது; தற்போது, 45,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோன்று, ‘சி’ வகை கம்பி விலையும் டன்னுக்கு, 7,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

அதிர்ச்சி

இதனால், சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் கட்டுமான பணிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிதாக வீடு கட்டுவோர், வீடு வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழக பிரிவு துணை தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: கட்டுமான பணிக்கான கம்பி விலை டன்னுக்கு, 5,000 முதல், 10,000 ரூபாய் வரை கடந்த, 10 நாட்களில் உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழலில், கம்பி உற்பத்திக்கான மூலப்பொருட்கள், அதன் மீதான வரி, மின்சார கட்டணம், போக்குவரத்து செலவு ஆகியவற்றில், எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், விலை ஏன் உயர்த்தப்பட்டது என்பது தெரியவில்லை. உற்பத்தியாளர்கள் நிலையில், டன்னுக்கு, 2,000 ரூபாய் விலை உயர்த்தப்பட்டால், டீலர்கள், விற்பனையாளர்கள், 10,000 ரூபாய் வரை விலையை உயர்த்துகின்றனர்.

கம்பி உட்பட கட்டுமான பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை என்ன என்பதை, அரசு தெளிவாக அறிவிக்காததே இதற்கு முக்கிய காரணம். கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த, தனி கவுன்சில் அமைக்குமாறு, தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இத்தகைய ஒரு கவுன்சில் அமைந்தால் மட்டுமே, காரணம் இல்லாத விலை உயர்வுகள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link