சென்னை: அதிமுக, பாஜ ஆட்சியில் செய்ததை சொல்வதற்கு எதுவும் இல்லாததால், கருணாநிதியை ஸ்டாலின் சிறை வைத்தார் என அவதூறு பரப்பும் இபிஎஸ்க்கு கண்டனம் தெரிவிப்பதாக மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கருணாநிதியை ஸ்டாலின் சிறை வைத்தார் என இபிஎஸ் அவதூறு பிரசாரம் செய்துள்ளார். அவர் கூட்டணி வைத்துள்ள பாஜ கொண்டு வந்த திட்டங்கள், மக்களுக்கு செய்த நல்ல விஷயங்கள் என சொல்வதற்கு என எதுவும் இல்லாத காரணத்தினால் அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 10 ஆண்டு அதிமுக ஆட்சியிலும் சொல்லும்படியாக எதுவும் செய்யவில்லை. இதுபோன்று அவதூறு பிரசாரத்தில் ஈடுபடுவது கண்டனத்துக்கு உரியது.
தமிழகத்தில் ‘ கந்தன் முருகன் ஓட்டு’ என்ற காணொலி வெளியிடப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன், முருகன் பாஜவுக்கு ஓட்டுப்போடுவது போன்று வீடியோ தயாரித்துள்ளனர். இதனை தயாரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சாதி, மதத்தை வைத்து பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. ஆனால், அந்த காணொலி அதனை அப்பட்டமாக மீறியிருக்கிறது. இதனை தயாரித்தவர்கள், அவர்கள் பின்னால் இருக்கும் பாஜ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை போலீஸ் கமிஷனாக இருந்த லோகநாதனை மாற்றிவிட்டு, அபிஷேக் தீக்சித்தை நியமித்துள்ளது. இவர் கிருஷ்ணகிரி எஸ்பி ஆக இருந்த ஒராண்டு காலத்தில் 87 பணியிட மாற்றங்கள் மூலம் அதிக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. தனது பதவியை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பதற்காக 18 மாதம் சஸ்பெண்ட் செய்யப்ப்டடவர்.இவ்வளவு நல்லவரை ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் லோகநாதனை மோசமானவர் என்ற பெயரில் இவ்வளவு நல்லவரை கொண்டு வந்து போடுவதன் மூலம் தேர்தல் கமிஷன் என்ன செய்தியை தமிழக மக்களுக்கு சொல்ல விரும்புகிறது என கேட்க விரும்புகிறேன்.
சிறந்த அதிகாரிகள், நேர்மையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் ஏற்கனவே பணி செய்த உபி, தமிழகமாக இருந்தாலும், பணி செய்த காலத்தில் மோசடி, லஞ்சம் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை மதுரை போலீஸ் கமிஷனரை நியமிக்க வேண்டும் இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதாக கருத வேண்டியிருக்கிறது. உடனடியாக அபிஷேக் தீக்சித் பணி நியமனத்தை தேர்தல் கமிஷன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
