தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 234 தொகுதிகளில் 70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி மீதமுள்ள 164 தொகுதிகளில் ஆளும் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. அந்த 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 28ஆம் தேதி அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் திருச்செந்தூரைச் சேர்ந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து ராமஜெயம் என்பவர் திமுக சார்பில் போட்டியிடுகிறார். ஆனால், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்ற சண்முகையா என்பவரை வேட்பாளராக நிறுத்தாமல் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த தொகுதி திமுகவினர் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும், ராமஜெயத்தை மாற்றி சண்முகையாவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என போராட்டமும் செய்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி இன்று (01-04-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நாங்கள் மறுபடியும் ஆட்சி அமைத்து திமுக தந்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என காத்திருக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். விரைவில் மறுபடியும் முதல்வரின் ஆட்சி அமைய போகிறது. மக்களுக்கு தந்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதைவிட தூத்துக்குடிக்கு இன்னும் பல வளர்ச்சிகளை கொண்டு வரக்கூடிய வாய்ப்பை அது நமக்கு உருவாக்கி தரும்” என்று கூறினார். இதையடுத்து ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிவித்ததில் சில சலசலப்புகள் இருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “எந்த வேட்பாளரை மாற்றி அறிவிக்கும் போது சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் மன தளர்வு இருக்கும். கூட்டணி பேசும்போது கூட சில சர்ச்சைகள் உருவாகும். ஆனால் எல்லோருக்கும் தெரியும், நாம் கருத்தியலால் ஒன்றுபட்டவர்கள். அதனால் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம், வெற்றியை நோக்கி பணியாற்றுவோம். அதேபோல தான் எந்த பகுதியிலும் ஒரு புதிய வேட்பாளரை நாம் அறிவிக்கும் போது அங்கு இருக்கக்கூடியவர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கும். இருந்தாலும் நிச்சயமாக திமுக தோழர்களாக அத்தனை பேரும் இணைந்து பணியாற்றி வெற்றியை அடைவோம்” என்று கூறினார். இதையடுத்து தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகமாகிவிட்டதாக பியூஷ் கோயல் குற்றம் சாட்டியதற்கு பதிலளித்த அவர், “தேசிய அளவை விட தமிழ்நாட்டில் மிக குறைந்த சதவீதத்தில் தான் குற்றங்கள் நடக்கிறது. அதற்காக குற்றங்கள் இருக்கலாம் பரவாயில்லை என்று நான் சொல்ல வரவில்லை. குற்றங்கள் நடந்தால் அதில் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது. குற்றங்களுடைய எண்ணிக்கை பா.ஜ.க ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களைவிட நிச்சயமாக குறைவாகத்தான் இருக்கிறது. அவர்கள் கூட்டணி வைத்துக்கொண்டிருக்க கூடியவர்கள் எப்படி தவறு செய்தவர்களையும் குற்றவாளிகளையும் காப்பாற்றினார்கள் என்று பாருங்கள். நம்முடைய முதல்வர் எப்படி குற்றம் செய்யக்கூடியவர்களுக்கு மிக விரைந்து தண்டனை பெற்று தருகிறார் என்பதையும் பாருங்கள்” என்று கூறினார்.
