நடிகரும், இயக்குநருமான ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படைப்பாக வெளியாக இருக்கும் படம் “கருப்பு”. சூர்யா நடித்துள்ள இப்படம் வருகின்ற மே 14 அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, யோகிபாபு, சுப்ரிதா மற்றும் சிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜி.கே விஷ்ணு இப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இப்படத்தின் இயக்குநர் பாலாஜி கூறுகையில், இந்த படத்தின் கதையை முதலில் விஜய்க்கு கூறியதாகவும், ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
அதாவது, “கருப்பு கதை உருவாக்கப்பட்டபோது, இந்த படத்திற்கு மிகப் பிரபலமான நட்சத்திரம் தேவை என்று உணர்ந்தேன். அந்த பிரபலம் விஜய்யாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால், இந்த கதையை விஜயிடம் கூறினேன். இந்த படத்தை விரைவில் முடிக்க முடியுமா? என்று அவர் கேட்டார். நான் 14 மாதங்கள் ஆகும் என்று கூறினேன். அதனால், அந்த வாய்ப்பு தவறிப்போனது. பின்பு அந்த கதையை சூர்யாவிடம் கூறினேன். அவர் உடனே ஒப்புக்கொண்டார். பின்பு அவருக்கு ஏற்றாற்போல் சில மாற்றங்களைச் செய்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
