கரூர்: தவெக தலைவர் விஜய் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக்கூடாது என 24 மணி நேரமும் அறிவுரை வழங்குவதே

கரூர்: தவெக தலைவர் விஜய் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக்கூடாது என 24 மணி நேரமும் அறிவுரை வழங்குவதே திமுகவின் வேலையாகிவிட்டது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இபிஎஸ் கருத்து

கரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் உடன் கூட்டணியை பொறுத்தவரை நாங்கள் எதுவும் சொல்லவில்லை. யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என நேற்றும்( மார்ச் 15), நேற்று முன்தினமும் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறிவிட்டார். அதோடு முடிந்ததாக தான் நாங்கள் பார்க்கிறோம்.

கூட்டணி குறித்து உள்கட்சி கூட்டம் போட்டது தவெகவினர். வீடியோ அழைப்பில் பேசினர். பேசியது அவர்கள் தான். அவர்களிடம் கேட்க வேண்டும்.

எங்களின் கூட்டணியின் தலைவர், முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் கருத்துதான் இறுதிக்கருத்தாக நாங்கள் பார்க்கிறோம். கூட்டணியை அவர் தான் வழிநடத்துகிறார். அவர் முதல்வர் வேட்பாளர். அதிக இடத்தில் அதிமுக நிற்கப் போகிறது. இபிஎஸ் முடிவு தான் எல்லோர் முடிவும் கூட. நான் தனியாக கருத்து சொல்லவிரும்பவில்லை. நேற்று முன்தினம் அவர் கருத்தை தான் இறுதிக் கருத்தாக பார்க்கிறோம். மாற்றம் இருக்கிறது இபிஎஸ் சொல்வார்.

ஏன் பேச வேண்டும்

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நாங்கள் கூட்டவில்லை. தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினால், எதற்கு கூட்டம் போட்டீஸ்கள், என்ன முடிவு எடுத்தீர்கள் என அவர்களிடம் கேட்க வேண்டும். இல்லாத விஷயத்தை பற்றி நான் ஏன் பேச வேண்டும்.

பதற்றம்

திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுவதை எல்லாம் கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா? நேற்று முன்தினம் முதல் திமுக பதற்றத்தில் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்து கிட்டதட்ட வெளியே போய்விட்டனர். திருமாவளவன் கூட்டணி பேச்சுவார்த்தை பக்கமே வரவில்லை. எத்தனையோ கட்சிகள் வர மாட்டோம் என அசமாதானத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அதனை கண்டுகொள்ளாமல், விஜய் எப்படி இருக்க வேண்டும்; இருக்கக்கூடாது என வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் அறிவுரை வழங்குவதே திமுகவின் வேலையாக போய்விட்டது.

திருமாவளவனும் அறிவுரை வழங்குகிறார். 4 நாட்கள் முன்னர், திருமாவளவனை பொறுத்தவரை விஜய் ஆர்எஸ்எஸ் ஆள். நேற்று திருமாவளவனை பொறுத்தவரை விஜய், கூட்டணிக்கு வரக்கூடாது. ஏதோ ஒரு முடிவு எடுத்து திருமாவளவன் சொல்லட்டும். அவரை பொறுத்த வரை ஆர்எஸ்எஸ் ஆளான விஜய், கூட்டணிக்கு வரக்கூடாது என எப்படி சொல்வார்.

தேவையில்லாத கருத்துகளை வைக்கின்றனர். டிகேஎஸ் இளங்கோவன் கருத்தை அதில் தான் பார்க்கிறோம்.

கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கட்சி உத்தரவிட்டுள்ளது. தொண்டர்களில் ஒருவனாக அடுத்து வரும் நாட்களில் பிரசாரம் செய்ய உள்ளேன். கூட்டணியில் அனைவரும் வெற்றி பெற வேண்டும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். நேரமும், காலமும் வரும் போது நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசுவோம்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Source link