கரூர் பாலாஜி இடப்பெயர்ச்சி… பாஸ்கருக்கு குரு பெயர்ச்சியா?

செ ந்தில் பாலாஜி… இந்த பெயர் தான், கரூரின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘இந்த முறை கரூரில் தான் போட்டியிட வேண்டும்’ என்று செந்தில் பாலாஜி முடிவெடுத்து, தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றி சுற்றி வந்தார்.

தி.மு.க.,வில் மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்க துறை வழக்கில் 471 நாள் சிறைவாசத்தில் இருந்தார். பின், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், தொகுதியில் குடிநீர், சாலை, சாக்கடை வசதி என, தெருவுக்கு தெரு வளர்ச்சி திட்டங்களுக்கு பூமி பூஜை போட்டுள்ளதோடு, பல இடங்களில் மக்கள் நல பணிகளையும் முடித்துள்ளார்.

‘வேளாண் கல்லுாரி, புதிய பஸ் ஸ்டாண்ட் உட்பட கரூர் தொகுதிக்கு 1,500 கோடி ரூபாயிலும், மாவட்டத்திற்கு 5,000 கோடி ரூபாயிலும் திட்டங்களை, ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளேன்’ என சொல்லி வந்த செந்தில் பாலாஜி, கரூரில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டே அனைத்து காரியங்களையும் செய்து முடித்திருந்தார்.

நிச்சய வெற்றி என்ற நம்பிக்கையோடு இருந்தவர், கடைசி நேரத்தில் கோவை தெற்கு தொகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டார். கரூரில், தனது சீடரான ஆசி.எம். தியாகராஜனை நிறுத்தி இருக்கிறார்.

துவக்கத்தில் இருந்து செந்தில் பாலாஜியை, கரூரில் எதிர்த்து அரசியல் செய்யும் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர் மட்டுமல்ல; கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஆசி பெற்றவர்.

அதனால், அவருக்கு ஒட்டுமொத்த கட்சியும் முன்னின்று தேர்தல் வேலை பார்க்கும் என்பது, கடந்த தேர்தல்கள் நிரூபித்த உண்மை. இந்த முறையும் அதே நிலையே நீடிப்பதாக அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

‘முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பிரச்னை, வெண்ணெய்மலை பாலசுப்ரமணியர் கோவில் நிலப் பிரச்னை உட்பட, பல்வேறு உள்ளூர் பிரச்னைகள் எதிராக நிற்கின்றன. அதை வைத்து, பிரசாரம் செய்தாலே போதும். அவரை வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையோடுதான், களத்தை எதிர்கொண்டேன். ஆனால், அவர் இம்முறை தோல்வி உறுதி என்பதை அறிந்து, தொகுதி மாறிவிட்டார்.

‘செந்தில் பாலாஜிக்கே, தொகுதி சாதகமாக இருக்காது என்ற நிலையில், அவருடைய சீடரெல்லாம் எம்மாத்திரம்?’ என்று தைரியத்தோடு தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டார் விஜயபாஸ்கர்.

‘செந்தில் பாலாஜி போட்டியிடுவதற் காக தயார் செய்யப்பட்ட தொகுதி என்பதால், வெற்றி பெறுவேன்’ என்று தன் பங்குக்கு மார்தட்டுகிறார் ஆசி.எம்.தியாகராஜன்.

Source link