ஐபிஎல் சீசன் 19 கடந்த மார்ச் 28 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனிடையே, கர்நாடக சட்டமன்றத்தில் இந்த ஐபிஎல் தொடர் குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில், “ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்துவதற்கு நாம் அனுமதி தருகிறோம். அதோடு, இலவசமாக நீர், மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்குகிறோம். ஆனால், கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்கு நமக்கு அவர்கள் இலவசமாக டிக்கெட் தருவதில்லை. நம்மிடம் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள்” என எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் சிவகுமார் இது குறித்து, “நான் ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ.) மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைவரிடமும் பேசினேன். அவர்கள் அனைவரும் டிக்கெட் வழங்குவதற்கு ஒப்புக்கொண்டனர். சபாநாயகர் உதய் காதருடனும் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. ஆர்.சி.பி.யின் ஐபிஎல் போட்டிகளுக்கான மூன்று டிக்கெட்டுகளை எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு வழங்க அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு முதன் முறையாகப் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கோப்பையை வென்றது. இது பெங்களூரு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், இந்த ஆண்டு மேலும் அவர்கள் ஆரவாரத்துடன் ஐபிஎல் தொடரைக் கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநில எம்எல்ஏ மற்றும் எம்பிகளுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுவதும் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
