“கலைஞரைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது”

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டை பகுதியில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (03-04-26) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், “கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டுடைய நிர்வாகம் சீரடைந்து வளர்ச்சி முடக்கப்பட்டு நம் மாநிலமே படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதுவும் கடைசி நான்காண்டு காலத்தில் தமிழ்நாட்டுடைய நிதி உரிமை, மாநில உரிமை எல்லாவற்றையும் அடகு வைத்தார்கள். அந்த பிளாஷ்பேக்கை நினைத்தாலே இன்றைக்கும் மக்கள் பீதி அடைவார்கள். அப்படிப்பட்ட கேவலமான ஆட்சியில் இருந்து உங்களுடைய ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து புதிய விடியலை தந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை நாம் உயர்த்தி இருக்கிறோம். ஏன் இந்தியாவிற்கே வழிகாட்டுகிற ஆட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தியாவே தெற்கே திருப்பி பார்க்கக்கூடிய அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை தலை நிமிர வைத்திருக்கிறோம்.

சுயசிந்தனை இல்லாமல் தமிழ்நாட்டை நாசப்படுத்தின எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தின் மொத்த உருவமான அவரை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். பத்து தோல்வி பழனிசாமி நம்முடைய திட்டங்களை எல்லாம் காப்பி அடித்து புதிதாக ஸ்டிக்கர் ஒட்டி வந்து கொண்டிருக்கிறார். மகளிர் உரிமைத் திட்டத்தை கடந்த தேர்தலின் போது நாம் அறிவித்த போது செயல்படுத்தவே முடியாது என்று பழனிசாமி சொன்னார். மக்களிடம் அந்த அறிவிப்புக்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு கடந்த தேர்தலிலேயே அவரும் மகளிருக்கான உதவித்தொகையை வழங்குவோம் என்று நம்மை விட அதிகமான தொகையை சொன்னார். ஆனால் மக்களான நீங்கள், பொய்களை மட்டுமே பேசுகிற பழனிசாமியை நம்ப மாட்டோம், துரோகங்களை விரும்பி செய்கிற பழனிசாமியை ஏற்றுக்கொள்ள மாட்டோம், உதயசூரியனுக்கு தான் வாக்களிப்போம் என்று சொல்லி வாக்களித்தார்கள். நாங்களும் சொன்ன மாதிரியே உரிமைத் தொகையை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நமது திட்டங்களை முடக்குவோம் தவிர்ப்போம் எனப் பிரச்சாரத்துக்கு போனால் மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்று நினைத்து உரிமைத் திட்டத்துக்கு குல விளக்கு என பெயரை சொல்லி ஸ்டிக்கர் ஒட்டிட்டு வந்திருக்கிறார். 2014இல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். 2016இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து நாட்டு மக்கள் எல்லோரையும் பேங்க் வாசலிலும் ஏடிஎம் வாசலிலும் இரவு பகலாக நிற்க வைத்தார். அடுத்து கொரோனா வந்தது. எல்லோரும் வீட்டில் இருக்கிற தட்டில் மணி அடிங்கள் என்று ஒரு காமெடி ஷோவை நடத்தினார். கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நடக்க வைத்தார். ஆக்சிஜன் சிலிண்டருக்காக மக்களை அல்லல் பட வைத்தார். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு என்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கு பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி இல்லை, ஜிஎஸ்டி இழப்பீடு இல்லை, நீட் தேர்வு விலக்கு இல்லை, தமிழ்மொழி வளர்ச்சிக்கு நிதி இல்லை, ரயில்வே திட்டங்கள் கிடையவே கிடையாது. தமிழ்நாட்டுக்கு ஒன்னுமே இல்லை, இது தான் மோடியினுடைய மாடல். இந்த நிலையில், தமிழ்நாட்டில் எப்படி கால் பதிப்பது என்று நினைத்து தமிழருக்கு துரோகம் செய்ய ஆள் கிடைப்பாங்களா என்று தேடினார்கள். அப்படி கிடைத்தவர்தான் துரோகத்தில் டாக்டரேட் பட்டம் வாங்கின பழனிசாமி.

எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய கலைஞரை நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்தேன் என நாக்கில் நரம்பில்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசிருக்கிறார். தோல்வி பயத்தில் எல்லை மேறி பேசி தொடங்கி இருக்கிறீர்கள். முதலமைச்சரா என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சி தலைவர் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தேர்தலில் அதை மக்கள் எடைபோட்டு பார்ப்பார்கள். உங்களுக்கு தக்க பதிலடியாக கொடுக்கத்தான் போகிறார்கள். ஆனால் கலைஞருடைய மகனா என்னுடைய உறவை பற்றி ஒரு சொல் பேசக்கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, எந்த தகுதியும் கிடையாது. கலைஞரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? கலைஞர் ஒரு சிங்கம், வாழ்ந்த காலம் வரை கோடிக்கணக்கான தொண்டர்களை என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களை என்ற ஒற்றை மாத்திரத்திலே கட்டி போட்டிருந்தவர் நம்முடைய கலைஞர் அவர். முதுமையால் உடல்நிலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்தார். நினைவாற்றலை இழந்த போது கூட மருத்துவர்கள் உங்களுக்கு யாரை பிடிக்கு என்று கேட்டால் அண்ணா என்று தான். பேரறிஞர் அண்ணாவுடைய அன்பு தம்பி அவர், முடியாத நிலையில் கூட அறிவாலயம் போக வேண்டும், முரசொலிக்கு போக வேண்டும் என துடித்தவர். அவரை யாரும் சிறையில் வைக்க முடியாது, அவருடைய இதய சிறையில்தான் நான் உட்பட இங்கே இருக்கிற உடன்பிறப்புக்கு அத்தனை பேரும் கூட இருந்தோம். எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, கலைஞர் பெயரை சொல்ல கூட உங்களுக்கு தகுதி கிடையாது கலைஞர் பெயரை சொல்லக்கூட எந்த வித யோக்கியதையும் கிடையாது. ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருந்து இந்த தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட ஒரே முதலமைச்சர் கலைஞர். அவருடைய கடைசி ஆசை என்னவென்றால், அண்ணாவுக்கு அருகே அவரை அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான். அப்பாவுக்காக அல்ல, தமிழகத்துடைய தலைவருக்காக நானே உங்கள் வீட்டி படியேறி வந்து கடற்கரையில் இடம் கொடுங்கள் என்று கை எடுத்து கும்பிட்டு கேட்டேன். அந்த சோக சூழ்நிலையில் கூட உங்க முன்னாடி வந்து நின்றேன், நீங்கள் கொடுத்தீர்களா? இரக்கமில்லாமல் மறுத்தவர் தானே நீங்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு எங்கள் தலைவரை பற்றி பேச எந்த யோக்கியதையும் கிடையாது” என்று ஆவேசமாகப் பேசினார். 

Source link