நான் வேலை நிமித்தமாக மதுரைக்கு மாற்றல் ஆகிவிட்டேன், அடுத்த 10- – 12 வருடங்கள் இங்குதான் குடும்பத்தோடு வசிக்கப் போகிறேன். சென்னையில் அபார்ட்மென்ட் வீடு இருக்கிறது. அதை விற்றுவிட்டு, இங்கு தனி வீடு வாங்கலாமா அல்லது வாடகை வீட்டில் இருந்து கொள்ளலாமா? ஏனென்றால் அபார்ட்மென்ட் வீடு 10 வருடத்தில் பராமரிப்பு / ரீசேல் என்னவாகும் என தெரியவில்லை.
– கார்த்திகை பெருமாள், வாட்ஸாப்
வீடு விற்பனை என்பது உங்கள் மனநிலையைப் பொறுத்தது. இது தான் சரியான அணுகுமுறை என்று எதுவும் இல்லை.
எதிர்காலத்திலும் சென்னை பக்கம் திரும்பும் வாய்ப்பு இல்லை, மதுரையிலேயே குடியேறிவிட திட்டமிடுகிறீர்கள் என்றால், சென்னை வீட்டை விற்பனை செய்யுங்கள்.
ஆனால், வீடு விற்பனை என்பது எப்போதும் கடைசி முடிவாகத் தான் இருக்க வேண்டும்.
ஏதோ ஓர் அத்தியாவசிய தேவைக்காக பணம் புரட்ட வேண்டும் எனும்போது, வீட்டை விற்பனை செய்வதைப் பற்றி யோசிக்கலாமே தவிர, பராமரிப்பு, ரீசேல் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு, விற்பனையில் இறங்குவது என்பது மூட்டைப் பூச்சிக்குப் பயந்துகொண்டு வீட்டைக் கொளுத்துவது போன்றதாகும்.
ஆனால், வீட்டை விற்பனை செய்த பின்னர் ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள். ‘நான் அன்று வீட்டை விற்பனை செய்திருக்கக் கூடாது. இன்னும் கொஞ்சம் காலம் காத்திருந்து விற்பனை செய்திருந்தால், கொள்ளை லாபம் கிடைத்திருக்கும்’ என்று உங்களையே நொந்துகொள்ளாதீர்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை!
ஷேர் மார்க்கெட் பற்றி தெரிந்து கொள்ள நேரடி வகுப்பு எங்கு நடைபெறுகிறது? ஆன்லைன் வகுப்பு நம்பிக்கையான நிறுவனம் எது?
– முருகையன், புதுச்சேரி.
சென்னையில் உள்ள பி.எஸ்.இ., இன்ஸ்டிடியூட் அல்லது என்.எஸ்.இ. அகாடமியில் கற்பது முறையானது. முறையான சான்றிதழுடன் கூடிய கட்டண ஆன்லைன் பயிற்சிக்கு என்.எஸ்.இ., அகாடமியையோ, பங்குச்சந்தை கல்விக்கென்றே செபி உருவாக்கியுள்ள என்.ஐ.எஸ்.எம்., அமைப்பை அணுகுவதே நல்லது.
ஆரம்பத்திலேயே ஏராளமாக பணம் கட்டி வகுப்புகளில் சேருவதற்குப் பதில், முதலில் மத்திய அரசின் ‘ஸ்வயம்’ (https://swayam.gov.in/) போன்ற இலவச இணையதளங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அவற்றில் இருந்து அடிப்படைகளைக் கற்றுக்கொள்வது பங்குச் சந்தை பற்றிய ஓர் அறிமுகத்தைக் கொடுக்கும்.
ஆனால், ‘உடனடி லாபம்’ என ஆசை காட்டும் அறிமுகமில்லாத தனியார் டெலிகிராம், வாட்ஸாப் குழுக்களின் பிடியில் மட்டும் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
எத்தனை வயதுக்கு மேற்பட்டவர்கள், எவ்வளவு வருமானத்துக்கு உட்பட்டவர்கள் ஐ.டி., ரிட்டர்ன் சமர்ப்பிக்க வேண்டாம்?
– ஏ.கந்தசாமி, கீழ்க்கட்டளை
வருமான வரிச் சட்டத்தின்படி, 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை. ஆனால், இதற்கு சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன.
ஒன்று, உங்களது வருமானம் என்பது வெறும் பென்ஷன் மற்றும் அந்த பென்ஷன் வரும் அதே வங்கிக் கணக்கில் கிடைக்கும் வட்டி ஆகிய இரண்டாக மட்டுமே இருக்க வேண்டும்.
இரண்டு, வீட்டு வாடகை, வேறு வங்கிகளில் உள்ள வைப்பு நிதி வட்டி, பங்குச்சந்தை வருமானம் உள்ளிட்ட வேறு எந்த வருமானமும் இருக்கக் கூடாது.
இத்தகையவர்கள், தங்களுடைய வங்கிக் கிளையில் படிவம் 12BBA என்ற உறுதிமொழிப் பத்திரத்தை எழுதித் தர வேண்டும்.
இதைக் கொடுத்துவிட்டால், வங்கியே உங்கள் வருமானத்தைக் கணக்கிட்டு, வரி ஏதேனும் இருந்தால் அதை அவர்களே பிடித்துக்கொண்டு அரசிடம் செலுத்திவிடுவர். நீங்கள் ஐ.டி.ஆர்., தாக்கல் செய்யத் தேவையில்லை.
ஒருவேளை உங்களுக்கு வயது 75க்குக் கீழ் இருந்தாலோ, வேறு வகையான வருமானங்கள் இருந்தாலோ, ஐ.டி.ஆர். தாக்கல் செய்யத் தேவையில்லாத வருமான வரம்பை இப்படிப் புரிந்துகொள்ளலாம்.
அதாவது, புதிய வரி முறையில், எந்த வயதுக்காரராக இருந்தாலும், உங்களது ஓராண்டு மொத்த வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், நீங்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யத் தேவையில்லை.
ஆனால், பழைய வரி முறையில், 60 வயதுக்குட்பட்டவர்கள் 2.5 லட்சம் ரூபாய் வரையும், 60 முதல் 80 வயது வரை உள்ளவர்கள், 3 லட்சம் ரூபாய் வரையும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 லட்சம் ரூபாய் வரையும், ரிட் டர்ன் தாக்கல் செய்ய வேண்டாம்.
ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், தற்போதைய புதிய விதிகளின்படி ‘வருமானம் 7 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வரி கட்ட வேண்டாம்’ என்பது உண்மைதான்.
ஆனால், வரி கட்ட வேண்டாம் என்பதற்காக, ஐ.டி.ஆர்., தாக்கல் செய்ய வேண்டாம் என்று அர்த்தமில்லை. உங்கள் மொத்த வருமானம் அடிப்படை வரம்பான 3 லட்சம் ரூபாயைத் தாண்டிவிட்டாலே, உங்களுக்குச் செலுத்த வேண்டிய வரி ‘ஜீரோ’ ஆக இருந்தாலும், நீங்கள் ஐ.டி.ஆர்., தாக்கல் செய்வது கட்டாயம். இதற்கு ‘நில் ரிட்டர்ன்’ என்று பெயர்.
எனது மகள் பிஎஸ்.சி., வேளாண்மை மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். அவருக்கு 2021ம் ஆண்டில் கல்வி கடன் ஒரு பொதுத் துறை வங்கியில் பெறப்பட்டது. வாங்கிய கடனுக்கு வட்டியாக உள்ளது. வங்கியில் வட்டியை கட்டலாமா என்று கேட்டால், தேவையில்லை, உங்களுக்கு நான்காண்டு கழித்து மானியம் கழிக்கப்படும், அப்போது கட்டுங்கள் என்கின்றனர். அது உண்மையா? கல்வி கடனுக்கு மானியம் கிடைக்குமா? எவ்வளவு மானியம் கிடைக்கும்?
– சேகர் ரெத்தினம், சேலம்
வங்கி சொல்வது சரி. தகுதியான மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்விக் கடன் வட்டி மானியத் திட்டம் (CSIS) நடைமுறையில் உள்ளது.
உங்களது குடும்ப ஆண்டு வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், படிக்கும் காலம் மற்றும் படிப்பு முடிந்த ஓராண்டு வரையிலான முழு வட்டியையும் அரசே செலுத்திவிடும்.
இந்த மானியத்திற்கு உச்சவரம்பு கிடையாது; குறிப்பிட்ட சலுகைக் காலத்தில் உங்கள் கடனுக்கு விதிக்கப்படும் வட்டித் தொகை முழுதுமே மானியமாகக் கழிக்கப்படும்.
இதற்காக உங்களின் வருமானச் சான்றிதழை வங்கி முறையாக அரசின் மானிய இணையதளத்தில் சமர்ப்பித்துள்ளதா என்பதை மட்டும் மேலாளரிடம் கேட்டு உறுதி செய்துகொள்ளுங்கள்.
எனவே, உங்கள் மகளது படிப்பு முடியும் வரை நீங்கள் வட்டியோ அசலோ செலுத்தத் தேவையில்லை; மானியம் வரவு வைக்கப்பட்ட பிறகே உங்கள் தவணை துவங்கும். நிம்மதியாகப் படிக்க வையுங்கள்!
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ—மெயில்’ மற்றும் ‘வாட்ஸாப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல்வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph: 98410 53881
