தி.மு.க-விற்காக பென் என்கிற வியூக வகுப்பு நிறுவனத்தை சபரீசன் நடத்திவருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக, தி.மு.க விற்காக தேர்தல் வேலைகளையும் பின்னிருந்து பார்த்து வரும் முக்கிய நபராகவும் சபரீசன் இருக்கிறார். ஆனால்,இதுவரை நேரடியாக எந்த அரசியல் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றதில்லை. இந்நிலையில், நண்பரின் தேர்தல் வெற்றிக்காக முதல் முறையாக நேரடியாக அரசியல் களத்திற்கு எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வரின் மகளும், தனது மனைவியுமான செந்தாமரையுடன் பங்கேற்றார் சபரீசன். இவர்களுடன், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய சபரீசன், `வில்லிவாக்கம் தொகுதி நமக்கு சாதகமான தொகுதி. இங்கு வேட்பளாராக நிற்கும் கார்த்திக் எனது நண்பர். இந்த தொகுதியில் நான் நிற்பதும், கார்த்திக் நிற்பதும் ஒன்றே.
எனக்கு எப்படி நீங்கள் வேலை செய்வீர்களோ… அப்படி தான் கார்த்திக்கும் வேலை பார்த்து வெற்றிபெற வைக்க வேண்டும்” என்று நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபுவிடம் தொகுதி நிலவரம் குறித்து ஆலோசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சபரீசன் “த.வெ.க தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதே, அவரது தன்னம்பிக்கையின்மையை காட்டுவதாக அமைந்துள்ளது. தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” என்றார்.
தி.மு.க சார்பாக டெல்லி அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கப்போகிறார் சபரீசன் என்கிற பேச்சு தி.மு.க-வில் உள்ளது. இந்நிலையில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிராசர களத்திற்கே சபரீசன் வந்துள்ளதால், விரைவில் நேரடி அரசியலுக்குள் முழுவீச்சில் இறங்கும் திட்டத்தில் மாப்பிள்ளை இருக்கிறாரோ? என்கிற பேச்சு தி.மு.க வில் எழுந்துள்ளது
