எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வரும் சூழலில் களத்திற்கு சென்று செயல்படுவது பெரிதும் கவனம் பெறும். அதை தவிர்க்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய தேதிக்கு தமிழக அரசியலையும், தேசிய அரசியலையும் ஆட்டி வைக்கும் விஷயம் என்றால் அது நீட் விவகாரம் தான். இளங்கலை மருத்துவ படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்விற்கான வினாத்தாள் சமீபத்தில் கசிந்து மறுதேர்வு நடத்தப்படும் சூழல் உருவானது. இதுதான் மாணவர்களை கொந்தளிக்க செய்த தொடக்கப் புள்ளி. கடந்த சில நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி பெரும் அதிர்ச்சியையும், மத்திய பாஜக அரசு மீதான விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது.
திமுக எதிர்க்க வேண்டிய இரண்டு கட்சிகள்
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். சில கைது நடவடிக்கைகளையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் களத்திற்கு சென்றிருக்கலாமே? என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. திமுகவை புகழ்வதற்கு அடிக்கடி பயன்படுத்தக்கூடிய விஷயம் என்பது ஆட்சியில் இல்லாத போது தான், எதிர்க்கட்சியாக திறம்பட செயல்படுவர். தற்போதைய சூழலில் மத்தியில் பாஜக, மாநிலத்தில் தவெக என இரண்டு கட்சிகளை எதிர்த்து எதிர்க்கட்சி அரசியலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
அண்ணா மாதிரி தான் நான்!CM விஜய்க்கு ஸ்டாலின் பதில் இத யாரும் எதிர்பாக்கல!
நீட் எதிர்ப்பு போராட்டங்கள் – களத்தில் நின்ற ராகுல் காந்தி
அதிலும் தற்போது நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிரானது. எனவே திமுகவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவான செயல்பாடுகளை முடுக்கி விடலாம். திமுக சார்பில் மாணவர்களை அரவணைத்து போராட களம் அமைத்து தரலாம். தங்கள் கட்சி சார்பிலேயே ஆதரவு நிலைப்பாட்டில் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ முன்னெடுக்கலாம். உதாரணமாக டெல்லியை கவனித்தால் புரியும். ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தி கைதாகினர். இதுதான் தேசிய அளவில் தலைப்பு செய்தி. இப்படியான ஒரு முன்னெடுப்பை கையில் எடுக்காமல் அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசியல் செய்வது எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் வளர எப்படி உதவிகரமாக இருக்கும்? இந்த இடத்தில் தான் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் கள அரசியலுக்கான முக்கியத்துவத்தை அளிக்காமல் அறிக்கைகளால் என்ன சாதித்தார்? இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது தான் மிச்சம் என்கின்றனர்.
திமுக எம்.எல்.ஏவை சந்தித்த கனிமொழி
சமீபத்தில் விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவரை சந்திக்க சிறைக்கே நேரில் சென்றார் திமுக எம்.பி கனிமொழி. ஆனால் உதயநிதி ஸ்டாலின் செல்லவில்லை. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். கனிமொழி சென்று சந்தித்த பின்னர், உதயநிதி ஸ்டாலின் ஏன் செல்ல வேண்டும். ஆனால் இருவர் வகிக்கும் பொறுப்பிற்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. எதிர்க்கட்சி தலைவராக களத்திற்கு செல்லும் போது அதன் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரிக்கும்.
களத்திற்கு செல்லாத உதயநிதி ஸ்டாலின்
இதற்கு முன்பு நடந்த சில நிகழ்வுகளையும் சுட்டிக் காட்டி கேள்விகளை எழுப்புகின்றனர் பத்திரிகையாளர்களும், அரசியல் விமர்சகர்களும். நாகர்கோவிலில் நீதிமன்ற காவலில் மரணமடைந்த சபரிவர்மன் விவகாரம், கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த விவகாரம், கோவையில் 10 வயது சிறுமி கொலை விவகாரம் உள்ளிட்டவற்றிலும் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உடன் நிற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் நேரடியாக செல்வது கவனத்தை ஈர்க்கும்.
உதயநிதி கையில் பெரிய பொறுப்பு
முதலமைச்சர் நாற்காலியில் விஜய் போன்ற நட்சத்திர பிம்பம் அமர்ந்திருக்கும் போது, அவர் செய்யும் ஒரு செய்கையும், நகர்வும் பெரிதாக கவனம் பெற்று வருகின்றன. காங்கிரஸ் கூட்டணி இழுபறியாக சென்று முடிந்த உடன் மு.க.ஸ்டாலின் செய்த செய்கையை, விஜய் சட்டமன்றத்திற்குள் செய்த போது பெரிதாக பேசப்பட்டது. இப்படியான நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளை உதயநிதி ஸ்டாலின் தவறவிடக் கூடாது. தவெக அரசிற்கு மக்கள் ஆதரவும், கூட்டணி கட்சிகளின் ஆதரவும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்லும் நிலையில், திமுக இன்னும் வீரியத்துடன் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான பொறுப்பு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைகளில் தான் உள்ளது.
Source link
