களைக்கட்டும் தேர்தல் களம்; ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.

அந்த வகையில் திமுக சார்பாக திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டை, ஐயம்பட்டி, ரெட்டியார் தோப்பு, பெரியார் நகர், காமாட்சி அம்மன் நகர், லூர்து நகர் மற்றும் பத்தாளபேட்டை ஊராட்சியைச் சேர்ந்த மேல மங்காவனம், கீழ மங்காவனம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் காக்கிச் சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டி வாக்குச் சேகரித்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று கூடி அவருக்கு பின்னால் பேரணியில் ஈடுபட்டனர். திருச்சி பெல் (BHEL) வளாகத்தில் உள்ள தொழிலாளர் முன்னேற்றச் சங்க (தொ.மு.ச) அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, தொகுதிக்கு உட்பட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில் நூற்றுக்கணக்கா ஆட்டோக்கள் அணிவகுத்து நின்றது பொதுமக்களின் கவனத் ஈர்த்தது. 

Source link