கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டடத்தில் திடீரென

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த கட்டடம் அருகே உள்ள மற்றொரு கட்டடத்தில் மாணவர்களுக்கு வழங்குவதற்கான ‘புத்தக பை’கள் வைக்கப்பட்டிருந்தது.

அதில் ஒரு அட்டை பெட்டியில் 32 புத்தக பைகள் வீதம், 687 பெட்டிகளில், புத்தக பைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென புத்தக பைகள் இருந்த கட்டட அறையில் இருந்து புகை வந்தது. உடன் அங்கிருந்தவர்கள் கதவை திறந்து பார்த்தபோது புத்தக பைகள் தீப்பிடித்து எரிந்தது. உடன் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு நீண்ட நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் புத்தக பைகள் எரிந்து சேதமானது.

ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் மற்றும் டி.இ.ஓ., ஜோதிமணி, பள்ளி தலைமையாசிரியர் கலாபன், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உதயகுமார், சித்ரா, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link