புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மேலப்புள்ளாண்விடுதி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு பனங்கள் குடித்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 க்கும் மேற்பட்டோர் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைகளிலும், ஆலங்குடி அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பிரச்சனை, அப்பகுதியில் பரபரப்பாக களம்பிய நிலையில் நேற்று (22-03-26) வடகாடு போலீசார் தேடி பனைமரங்களில் கள் இறக்க பயன்படுத்திய பானைகளை கல்வீசி உடைக்க முயன்று முடியாத நிலையில் மரத்தில் ஏறி பானைகளை அகற்றியதுடன், கள் விற்பனைக்கு மயன்படுத்திய குடம், அளவு குவளை, பிளாஸ்டிக் கவர்கள், வடிகட்டி ஆகியவற்றை கைப்பற்றினர். ஆனால் கள் இறக்கி விற்பனை செய்த பனை ஏறும் தொழிலாளி தலைமறைவானார்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த குத்தாலம் மகன் தங்கச்சாமியை அவரது ஊரில் கைது செய்து வடகாடு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரனையில், லாரி ஓட்டுநரான வடகாடு முத்துக்கருப்பன் மகன் பிரபு உடன் நட்பு ஏற்பட்டது. அப்போது தான் எங்கள் ஊரில் கள் இறக்கலாம் என்று அழைத்தார். நானும் எனது மகனும் வடகாடு வந்து பிரபு வீட்டு போர்டிகோவில் தங்கினோம். பிறகு மேலப்புள்ளாண்விடுதி கரிகாலன் என்பவரின் தோட்டத்தின் வரப்பில் உள்ள பனை மரங்களில் கள் இறக்க கரிகாலனிடம் அனுமதி பெற்று 4 மரங்களை தேர்வு செய்து கள் இறக்கினோம். 2 லிட்டர் அளவுக்கே கள் கிடைத்தது. அதனால் நான் எனது சொந்த ஊரில் இருந்து 2 கேன்களில் கொண்டு வந்திருந்த 10 லிட்டர் பழைய கள் 2 லிட்டரை, 20 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் காய்ச்சிய சவ்வரிசி, சீனி கலந்து பிளாஸ்டிக் கவர்களில் கட்டி பிரபுவின் சவுக்கு தோப்பில் வைத்து விற்பனை செய்தோம். அதிகமானோர் வந்ததால் அதே போல அடுத்த நாள் 40 லிட்டரில் பழைய கள்ளை கலந்து புளிப்பு தெரியாமல் இருக்க சீனியும், கள்ளைப்போல திக்காக இருக்க கொதிக்க வைத்த சவ்வரிசி தண்ணீரையும் கலந்து விற்பனை செய்தோம்.
ஆனால் பல நாட்களான பழைய கள் கலந்ததால் 2வது நாளில் குடித்த பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக போனில் மிரட்டினர். அதனால் சனிக்கிழமை கள் விற்பனை செய்யாமல் பயத்தில் சொந்த ஊருக்கு போய்விட்டேன். என் மகன் முதல் நாளே ஊருக்கு போய்விட்டார். ஆனால் அவரது ஜிபே நம்பரில் தான் கள் விற்ற பணத்தை அனுப்பச் சொன்னேன் என்று கூறியுள்ளார். மேலும், கள் குடித்தவர்கள் உடல் நலம் பாதிக்கும் அளவிற்கு என்ன ரசாயனம் கலக்கப்பட்டது என்று போலீசார் கேட்ட போது, வேறு எந்த ரசாயனமும் கலக்கவில்லை பல நாள் ஆன பழைய கள் தான் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்று மட்டுமே கூறியுள்ளார். விசாரனையைத் தொடர்ந்து தங்கச்சாமி, பிரபு, கரிகாலன் ஆகியோரை வடகாடு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் விபரமறிந்தவர்கள் கூறும் போது, 20 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பழைய புளித்த கள் கலப்பதால் எந்தப் பாதிப்பும் வராது. போதையை அதிகரித்து வாடிக்கையாளர்களை இழுக்கவும் பணம் சம்பாதிக்கவும் ஏதோ மாத்திரை அல்லது ரசாயனம் கலந்து தான் விற்பனை செய்திருக்க வேண்டும். அதனால் தான் இத்தனை பேரை பாதித்துள்ளது. ஆனால் ரசாயனம் கலந்த கள் என்று சொன்னால் பிரச்சனை ஆகும் என்பதால் பழைய புளித்த கள் என்று கூறி சமாளித்துள்ளனர் என்றவர்கள், இனிமேலும் இது போல நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்தப் பிரச்சனையையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோயில் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை செய்ததால் கள் இறக்குவது தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். ஆவுடையார்கோயில் பகுதியில் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
