'கள்' போதை பானம் என்றால் டாஸ்மாக்கில் அரசு விற்பது புனித தீர்த்தமா; சீமான் கேள்வி

சென்னை; உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத கள்ளை, போதைப்பொருள் என்று தடை செய்துள்ள தமிழக அரசு, தன்னுடைய நேரடி நிர்வாகத்தில், ‘டாஸ்மாக்’கில் விற்பதற்குப் பெயர் என்ன புனித தீர்த்தமா என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

திருச்சி மாவட்டம் லால்குடி, மண்ணச்சநல்லுார் பகுதிகளில், ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களை, சமயபுரம் போலீசார் மிரட்டி, கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர். ‘கள்’ இறக்கும் எளிய மனிதர்களை, கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள்போல ஆடைகளை களைந்து, அவமதித்து, உள்ளாடைகளுடன் சிறையில் அடைத்து வைத்திருப்பது கொடுங்கோன்மையாகும்.

மருத்துவ குணமுடைய பொருட்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்கிறது, இந்திய அரசமைப்புச் சட்டம். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படும் நிலையில், அதற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது.

உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத கள்ளை, போதைப்பொருள் என்று தடை செய்துள்ள தமிழக அரசு, தன்னுடைய நேரடி நிர்வாகத்தில், ‘டாஸ்மாக்’கில் விற்பதற்குப் பெயர் என்ன புனித தீர்த்தமா?

அரசு நடத்தும் மதுக்கடைகளில் மது அருந்துவோருக்கு பாதுகாப்பாக காவலுக்கு நிற்கும் போலீசார், எளிய மக்கள் மீது பொய் வழக்கு புனைந்து, சிறையில் அடைப்பதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்.

இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

Source link