சென்னை: தமிழக கவர்னர் ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை, ஆபாசமாக பேசியதாக பதிவான வழக்கில், தி.மு.க., பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது நாள் பிறந்தநாள் பொதுக் கூட்டம், கடந்த 2023 ஜூன் 16ல் நடந்தது.
கூட்டத்தில், தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 63, தமிழக கவர்னர் ரவி, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதல்வர் பழனிசாமி, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள், பெண்கள் அமைப்பினர் என, பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, ஆபாசமாகப் பேசுவது, கலகத்தை துாண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை, சென்னை 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பி.ரேவதி விசாரித்தார்.
அப்போது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், ‘உயர் அதிகாரிகளின் அழுத்தத்தின் படி, பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
‘அசிங்கமான வார்த்தைகள், கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக, கூட்டத்தில் பங்கேற்றவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எவரும் புகார் கொடுக்கவில்லை’ என, வாதிடப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில், ‘முன்னாள் முதல்வர், பா.ஜ., தலைவர்கள் குறித்து, ஆபாசமாகப் பேசியுள்ளார். சாட்சிகள் வாயிலாக, தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு:
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகளில், கலகத்தை துாண்டுவது என்ற குற்றச்சாட்டை மட்டும், அரசு தரப்பு நிரூபிக்கவில்லை.
ஆனால், மற்ற குற்றச்சாட்டுகளை, அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்து உள்ளது.
எனவே, ஆபாசமாக பேசியதற்கு, 3 மாதம் சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்சாட்டில், ஓராண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் குற்றச்சாட்டுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
