பட மூலாதாரம், Mohammad Sartaj Alam
கட்டுரை தகவல்எழுதியவர், முகமது சர்தாஜ் ஆலம்பதவி, பிபிசி இந்திக்காக
பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
“அன்று அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியபோது, உயரம் தாண்டுதலின்போது கால் வழுக்கி, என்னுடைய பல மாத கடின உழைப்பு வீணாகிவிடும் என்று நான் நினைக்கவில்லை.”
அக்டோபர் 25-ஆம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற கவிதா தேவியின் வார்த்தைகள் இவை.
இந்த உடல் தகுதித் தேர்வுக்காக கவிதாவுக்கு இலவசப் பயிற்சி அளித்த பயிற்சியாளர் அங்கித் அகர்வாலும் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார்.
“உயரம் தாண்டுதலில் கவிதா தோல்வியடைவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பயிற்சியின்போது ஓட்டப்பந்தயத்தில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாரோ, அதே அளவுக்கு உயரம் தாண்டுதலிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டார்” என அங்கித் பிபிசியிடம் தெரிவித்தார்.
“முதல் சுற்றிலேயே 1,600 மீட்டர் ஓட்டத்தை கவிதா எளிதாக நிறைவு செய்தார். உயரம் தாண்டுதலிலும் அவர் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்” என்கிறார் அங்கித்.
பயிற்சியாளரைப் போலவே கவிதாவும் ஏமாற்றத்தில் இருக்கிறார்.
“இந்தத் தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குப் பல மாதங்கள் ஆகலாம்” என்கிறார் அவர்.
குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே கவிதாவின் போராட்டம்
பட மூலாதாரம், Mohammad Sartaj Alam
வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடிகள் சூழ்ந்தாலும் மனம் தளராமல் போராடும் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது கவிதாவின் கதை.
ஐந்து ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கவிதாவின் கணவர், 2023-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அவரது சிகிச்சைக்காக வாங்கிய கடன், குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக முற்றிலும் சீர்குலைத்துவிட்டது.
இந்தச் சூழலில், மாமனார், மாமியார், மகன், மகள் ஆகியோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் கவிதாவின் தோள்களில் இறங்கியது. அன்று தொடங்கிய அவரது போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.
குடும்பத்தை நடத்துவதற்காக கவிதா சில சமயங்களில் செங்கல் சூளையிலும், சில சமயங்களில் வயல்களிலும் வேலை செய்கிறார்
வேறு எங்கும் வேலை கிடைக்காதபோது, கிராமத்தில் கிடைக்கும் கூலி வேலைகளையும் பார்க்கிறார்.
இந்நிலையில், ராம்கர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியானபோது, கவிதாவின் கண்களில் ஒரு புதிய நம்பிக்கை மலர்ந்தது.
“ஊர்க்காவல் படையில் வேலை கிடைத்தால், அது எனது குழந்தைகளின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பான அடித்தளமாக இருக்கும் என்று நினைத்தேன்” என்கிறார் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ள கவிதா.
இந்த நம்பிக்கையுடன் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய கவிதாவுக்கு, அவரது மாமியாரும் உறுதுணையாக இருந்தார்.
ஓட்டப்பயிற்சிக்காகப் பயிற்சியாளரை அணுகிய கவிதா
பட மூலாதாரம், Mohammad Sartaj Alam
படக்குறிப்பு, கவிதா தேவியின் மாமியார், பூல்கோ தேவி.
கிராமத்தில் தினமும் அதிகாலை 5 மணிக்கு ஓட்டப்பயிற்சி மேற்கொண்டுவந்தார் கவிதா. இந்த நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் சிதோ-கான்ஹு மைதானத்தில் பயிற்சியாளர் ஒருவர் மேற்பார்வையில் இலவச ஓட்டப் பயிற்சித் தேர்வு நடைபெறுவதை தனது நாத்தனார் மூலம் அவர் தெரிந்துகொண்டார்.
அந்தப் பயிற்சி மையம் நடத்திய இலவசத் தேர்வில் பங்கேற்ற கவிதா, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே 1,600 மீட்டர் ஓட்டத்தை நிறைவு செய்தார்.
புடவை அணிந்து, வெறுங்காலில் அவர் ஓடிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இதையடுத்து கவிதாவுக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்தன.
“நவீன விளையாட்டுக் காலணிகள், டிராக் சூட், முறையான பயிற்சி உபகரணங்கள் ஏதுமின்றி கவிதா 1,600 மீட்டர் ஓடியதைப் பார்த்தோம். அதனால் அவருக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்க முடிவு செய்தோம்” என்கிறார் பயிற்சியாளர் அங்கித் அகர்வால்.
இதையடுத்து, கவிதாவுக்கு ஓடுவதற்கான காலணிகள், டிராக் சூட், தேவையான பயிற்சி உபகரணங்களையும் அங்கித் இலவசமாக வழங்கினார்.
இந்த உதவியும், மக்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகளும் கவிதாவுக்குப் புதிய நம்பிக்கையை அளித்தன. ஊர்க்காவல் படையில் வேலை கிடைத்துவிட்டால் தனது குடும்பத்தின் நிலை மாறிவிடும் என்று அவர் நம்பினார்.
பட மூலாதாரம், Mohammad Sartaj Alam
அக்டோபர் 25: சிதைந்த கனவு
ஆனால், திரைப்படக் கதைகளில் வருவதைப் போல வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியான முடிவைத் தருவதில்லை.
அக்டோபர் 25 அன்று நடைபெற்ற ஊர்க்காவல் படைத் தேர்வில், 1,600 மீட்டர் ஓட்டத்தை வெற்றிகரமாகக் கடந்தார் கவிதா. அடுத்ததாக, அவர் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க வேண்டியிருந்தது.
ஓட்டப்பந்தயத்துக்காக கடுமையாக உழைத்திருந்த கவிதா, மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைந்திருந்தார். அவரது கால்களும் களைத்திருந்தன.
தேர்வுக்கு முன்பு பிபிசியிடம் கவிதா கூறியிருந்த விஷயம் நினைவுக்கு வருகிறது.
“எனது காணொளி வைரலான பிறகு, நாங்கள் மிகவும் அசௌகரியமாக உணர்கிறோம். அக்டோபர் 25-ஆம் தேதி ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கிராமத்தினர் எங்களைக் கேலி செய்வார்கள் என்று நினைக்கிறோம். அதனால் பயமாக இருக்கிறது.”
கவிதாவின் இந்த அச்சத்தைப் பயிற்சியாளர் அங்கித்தும் ஒப்புக்கொள்கிறார்.
“ஓட்டப்பந்தயத்தை வெற்றிகரமாக முடித்த பிறகும் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார்” என்கிறார் அவர்.
“உயரம் தாண்டுதலைத் தொடங்கும்போது அவரது கால் சற்றே வழுக்கியது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை அவரால் தாண்ட முடியவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்த அனைவரின் கவனமும் கவிதாவின் மீதே இருந்தது. ஆனால், அவர் தோல்வியடைந்ததும் மைதானத்தில் அமைதி நிலவியது.
கவிதாவின் கண்கள் கலங்கின. பல மாதங்களாக அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தக் கனவு, ஒரே நொடியில் சிதைந்துபோனது.
பட மூலாதாரம், Mohammad Sartaj Alam
வீட்டில் நிலவிய சோகம்: கவிதா, மாமியார், மாமனாரின் வேதனை
கவிதா வீடு திரும்பியபோது, அவரது கால்கள் தளர்ந்திருந்தன. வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அவருடைய மாமியார், மாமனாரின் கண்கள் நம்பிக்கைக்கும் பயத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தன.
கவிதாவின் கண்களைப் பார்த்ததுமே, நடந்ததை அனைவரும் புரிந்துகொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு வரை நம்பிக்கை ஒளி வீசிக்கொண்டிருந்த இரண்டு அறைகள் கொண்ட வீட்டின் சிறிய முற்றம் இப்போது அமைதியாகிவிட்டது
“இளைய மருமகள் சரிதா தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், கவிதாவைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் எனக்கு மருமகள் மட்டுமல்ல. மகளும் மகனும் அவர்தான். எனக்கு எல்லாமே அவர்தான்” என்கிறார் கவிதாவின் மாமியார் பூல்கோ தேவி.
“கவிதா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டார். ஆனால், என் மகன் உயிருடன் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்பாததைப் போலவே, கவிதா வெற்றி பெறுவதையும் அவர் விரும்பவில்லை போலும்.” என்று ஏமாற்றத்துடன் பேசுகிறார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், “மகன் இறந்ததிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றி வருவதைப் போலவே, இனியும் கவிதா விவசாயத்தையும் செங்கல் சூளை வேலையையும் நம்பியிருக்க வேண்டியிருக்கும்” என்றார்.
கவிதாவின் தோல்வி என்பது ஒரு தேர்வில் ஏற்பட்ட பின்னடைவு மட்டுமல்ல. திறமையும் விடாமுயற்சியும் இருந்தும், போதிய வாய்ப்புகளும் வளங்களும் இல்லாததால் ஒருவரின் கனவுகள் எவ்வாறு தடைபடுகின்றன என்பதையும் அவரது கதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கவிதாவுக்குச் சரியான நேரத்தில் முறையான பயிற்சி, ஊக்குவிப்பு, தேவையான வசதிகள் கிடைத்திருந்தால், ஒருவேளை முடிவு வேறுவிதமாக இருந்திருக்கலாம்.
“நான் மிகவும் ஏமாற்றமடைந்திருக்கிறேன். அதை வார்த்தைகளால் விவரிக்கக்கூட முடியவில்லை. என் இதயம் முழுவதும் காயங்கள் நிறைந்திருப்பதைப் போல உணர்கிறேன்” என்கிறார் கவிதா.
“இந்தத் தேர்வுக்குப் பிறகு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இந்தத் தோல்வி என்னை அதே இடத்திலேயே நிற்க வைத்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




