கவுகாத்தி: அசாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய் Su-30 போர் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானிகள் அனுஜ் மற்றும் பூர்வேஷ் துராக்கர் உயிரிழந்தனர்.
அசாமின் ஜோர்ஹட் தளத்தில் இருந்து கிளம்பிய சுகோய் Su-30 விமானம் நேற்றிரவு 7:42 மணியளவில் ரேடார் தொடர்பை இழந்தது. உடனடியாக இந்திய விமானப்படை அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டது. தீவிர தேடுதல் முடிவில், விமானம் கீழே விழுந்து நொறுங்கியது கண்டறியப்பட்டது. அதில் பயணித்த விமானிகள் அனுஜ் மற்றும் பூர்வேஷ் துராக்கர் இருவரும் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது.
விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், ”இந்த துயரமான நேரத்தில் அசாமில் விபத்துக்குள்ளான சுகோய் Su – 30 போர் விமானத்தில் பயணித்த அனுஜ் மற்றும் பூர்வேஷ் துராக்கர் ஆகிய இரு விமானிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம்” என தெரிவித்துள்ளது.
ராஜ்நாத் சிங் இரங்கல்
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சுகோய் Su- 30 போர் விமானம் விபத்தில் விமானிகள் இருவரை இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்களின் துணிச்சலும், தேசத்திற்கான சேவையும் எப்போதும் நினைவுகூரப்படும். துயரத்தில் நேரத்தில் விமானிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவாக தேசம் துணையாக இருக்கும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
