கவுகாத்தி: ‘அசாமில் பாஜ ஹாட்ரிக் வெற்றி பெறும். காங்கிரஸை மீண்டும் மக்கள் நிராகரிக்க தயாராகி விட்டனர்,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கோகாமுக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, அவர் பேசியதாவது; கடந்த 10 ஆண்டுகளில் அசாம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை ஆசி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனெனில், தொடர்ச்சியான வளர்ச்சிக்கான ஆதரவு, இந்த மக்களின் உற்சாகத்தால் பிரதிபலிக்கிறது.
வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும். இந்தத் தேர்தல் விக்சித் பாரத் உருவாக்குவதற்கானது. அசாமில் பாஜ மீண்டும் ஆட்சி அமைத்து ஹாட்ரிக் சாதனை படைக்கும் அசாம் மக்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் நிராகரிக்கத் தயாராகி விட்டனர். இந்தக் கட்சி 3வது முறையாக தோல்வியை சந்திக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அசாம் தேர்தலுக்கான பாஜ தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார். முக்கிய வாக்குறுதிகளை மட்டும் மேடையில் அறிவித்தார்.
அதாவது, அசாமில் 15 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் பயனடைவார்கள். இதுவரை கான்கிரீட் வீடு கிடைக்காத ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
ஏழைக் குடும்பங்களுக்கு ‘கேஜி முதல் பிஜி’ (KG to PG) வரை இலவசக் கல்வி வழங்கப்படும்.
அசாமில் சுய உதவிக்குழு பெண்கள் தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தில் ஏற்கனவே சுமார் 3 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதை 40 லட்சம் பெண்களாக விரிவுபடுத்துவதே என்டிஏ கூட்டணியின் இலக்கு.
கணவனை இழந்தவர்கள், விவாக ரத்து பெற்றவர்கள், திருமணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி திட்டத்தை கூடுதல் மேம்பாடுகளுடன் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
