கவுகாத்தி: அசாம் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, போட்டியில்

கவுகாத்தி: அசாம் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, போட்டியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் வேட்பாளர் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டசபைக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 31,490 ஓட்டுச்சாவடிகளில் 2.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உடல்குரி (தனி) தொகுதியில் சுரேன் தைமரி என்பவர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரும் வேட்புமனு தாக்கல் செய்து, தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சி ரீதியான ஆதரவு தனக்கு வழங்கப்படாததே இந்த முடிவுக்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; காங்கிரசின் தலைமை என்னை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் பிரசாரம் முழுவதும் தலைமை என்னுடன் அடிப்படைத் தொடர்பு கூட வைக்கவில்லை. நான் மூத்த தலைவர்களை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அங்கு ஒருங்கிணைப்போ, ஆதரவோ அல்லது வழிகாட்டுதலோ இல்லை, என்று சுரேன் தைமரி கூறினார்.

தேர்தலில் இருந்து விலகும் தனது முடிவை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார். இருப்பினும், வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதால், இப்போது அவர் போட்டியில் இருந்து விலகுவது மிகவும் தாமதமானது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அசாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பெதப்ரதா போரா கூறுகையில், ‘ சுரேன் முறைப்படி ராஜினாமா கடிதத்தை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. இது குறித்து எங்களுக்குத் தெரியாது. எனினும், நாங்கள் அவரைத் தொடர்பு கொள்வோம்,’ என்றார்.

அசாம் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link