கவுகாத்தி: வீண் செலவு வ டகிழக்கு மாநிலமான அசாமில், ஏப்., 9ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முன்னாள் காங்கிரஸ்காரரான ஹிமந்த பிஸ்வ சர்மா முதல்வராக உள்ளார். அசாம் தேர்தலை, காங்., சார்பில் பிரியங்கா கவனித்து வருகிறார்.
இங்கு, காங்., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவ குமாரை பார்வையாளராக நியமித்தார். இதற்கு காரணம், சிவகுமார் தாராளமாக கட்சிக்கு செலவு செய்யக்கூடியவர். அசாமில், காங்., வேட்பாளர்களுக்கு பணமும் தந்து, பிரசார செலவையும் ஏற்றுக்கொள்வார் என்பதால், அசாமின் காங்., பார்வையாளராக நியமிக்கப்பட்டார், சிவகுமார்.
இதை பார்த்து பயந்த பா.ஜ., தெற்கு பெங்களூரு தொகுதி எம்.பி.,யான தேஜஸ்வி சூர்யாவை, அசாமுக்கு அனுப்பி, சிவகுமாரை மடக்க திட்டமிட்டது. ஆனால், அதற்குள் நிலைமை மாறிவிட்டது.
குவஹாத்திக்கு வந்த சிவகுமார், மாநில காங்கிரசின் நிலைமையை பார்த்தார். காங்., முக்கிய தலைவர்கள் பா.ஜ., பக்கம் சென்றுவிட்டனர். இன்னும் சிலர், அந்த பக்கம் தாவ தயாராக உள்ளனர் என்பதையும் அறிந்தார்.
எனவே, இங்கு வீணாக பணத்தை செலவழிக்க அவர் விரும்பவில்லை. ‘அசாமில் காங்., வெற்றி பெறுவது கடினம். காரணம், கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது’ என, பிரியங்காவிடம் உண்மையைப் போட்டு உடைத்தாராம் சிவகுமார்.
தன் தலைமையில், முதன்முறையாக காங்கிரசை வெற்றி பெற வைக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என, துவக்கத்தில் மகிழ்ச்சியில் இருந்த பிரியங்கா, சிவகுமாரின் பேச்சை கேட்டு நொந்து போயுள்ளாராம்.
