தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்படுபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவருக்கு சொந்தமான “போட்டான் கதாஸ்” எனும் தயாரிப்பு நிறுவனம் கடந்த 2013 2014 ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. எனவே, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் அந்த நிறுவனத்திற்கு எதிராகக் கடந்த 2019 ஆம் ஆண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வருமானவரித்துறை மனுத்தாக்கல் செய்தது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கவுதம் வாசுதேவ் மேனன் கடந்த 2023 ஆம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த திங்கள் கிழமை அன்று நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில், கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில், “வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ள இந்த நிறுவனத்தில் இருந்து கவுதம் வாசுதேவ் மேனன் கடந்த 2011 ஆம் ஆண்டே விலகிவிட்டார். எனவே, 2013 – 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அவர் மீது வழக்கு தொடர முடியாது” என்று வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ” வழக்கில் குறிப்பிடப்பட்ட நிதியாண்டிற்கு முன்பே அவர் அந்த நிறுவனத்தின் பதவியில் இருந்து விலகிவிட்டார். எனவே, அந்த நிறுவனம் வருமானவரி தாக்கல் செய்யவில்லை என்று கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது” எனக் கூறி அவருக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில், மற்றவர்களுக்கு எதிரான இந்த வழக்கை விறைத்து முடிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
