புதுக்கோட்டை: ”காங்கிரசில் ஓரிருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகின்றனர்,” என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
புதுக்கோட்டை
மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் தி.மு.க., சார்பில், ‘தமிழகம்
தலைகுனியாது’ என்ற தலைப்பில், பிரசார பொதுக்கூட்டம், நேற்று இரவு நடந்தது.
இதில், தமிழக அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
இந்த கூட்டத்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:
எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது தான், திராவிட மாடல் அரசின் கொள்கை. எங்கு
சென்றாலும், சாலை சரியில்லை என அங்கலாய்க்கின்றனர். சாலை அமைத்து
கொடுத்தால், வேகமாக வாகனத்தை ஓட்டுகின்றனர். அதனால் விபத்து நடக்கிறது.
விபத்து நடந்தால் ஒப்பாரி வைக்கின்றனர். இதற்கெல்லாம் என்ன செய்வது?
செயல்படுபவர்
தான் அமைச்சராக இருக்க வேண்டும். ஏன் என்றால், என் துறையில் 108 பேர்
ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். அவர்களை மேய்ப்பதே பெரிய சிக்கலாக உள்ளது.
பதவி உயர்வு கொடுத்து சிலரை, டி.எப்.ஓ.,வாக ஆக்கி, ஒரு மாதிரி ஓட்டிகிட்டு
இருக்கேன். நிர்வாகத்தில் பல விதங்கள் உள்ளன. காங்கிரசில் ஓரிருவர்
இருந்து கொண்டு உயிரை வாங்குகின்றனர். வளர்ந்து வந்த இயக்கமாக தி.மு.க.,
உள்ளது.
திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல், ஒருவன் பிறந்து வர
வேண்டும். 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்புறம் அவர்களால் வர
முடிந்ததா? சொன்னால் கோபித்து கொள்வர். கருணாநிதி 110 இடங்களில் வென்றார்.
அப்போது, அவர் கூட்டணி ஆட்சி கொடுத்தாரா? காங்கிரஸ்காரன் நம்மோடு இருந்தால்
இருந்துட்டு போகட்டும்; வேண்டாம் என்று சொல்லவில்லை.
நேற்று முன்
தினம் கூட, நானும், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும் ஒரு திருமண
நிகழ்வில் சந்தித்துக் கொண்டோம். என்ன செய்வது, கூட்டணியில் இருக்கின்றனர்.
போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறோம்; போய் நிற்கிறோம். எந்த கூட்டணி என்றாலும்
சரிதான். முதல்வர் ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான், நம் கொள்கை. தனியா
நிக்கணும் என்றாலும் ரெடி. எலக் ஷன் வந்து என்ன கெட்டு போய் விட்டோம்.
ப.சிதம்பரம்
சிவகங்கையில் ஜெயித்ததால் கெட்டு போய்விட்டதா? அவர் வெற்றி பெற்றது
தொடர்பான வழக்கு என்னாச்சு என்று முதல்வர் ஒரு முறை கேட்டார். நீங்கள் தான்
நிறுத்தி வைக்க சொன்னீர்கள். நிறுத்தி வைத்து விட்டேன் என்றேன். அதைக்கூட
அவர் மறந்து விட்டார். என்ன செய்வது கூட்டணியில் இருக்கின்றர். சிதம்பரமும்
தற்போது நண்பராகி விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.
