காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தற்போது வரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாத நிலை நிலவி வந்தது.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (03.04.2026) அன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிப்பின்படி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள பட்டியலில், முக்கியமான வேட்பாளர்களாக வேளச்சேரி தொகுதியில் ஜே.எம்.எச். ஆசன் மௌலானா, ஸ்ரீபெரும்புதூரில் கே. செல்வப்பெருந்தகை, கிருஷ்ணகிரியில் ஏ. செல்லக்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், பொன்னேரிக்கு துரை சந்திரசேகர், பென்னாகரத்திற்கு ஜி.கே.எம். தமிழ்குமரன், ஈரோடு (கிழக்கு) தொகுதிக்கு கோபிநாத் பழனியப்பன், காரைக்குடிக்கு எஸ். மாங்குடி மற்றும் கிள்ளியூர் தொகுதிக்கு எஸ். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெண் வேட்பாளர்களாக சிங்கநல்லூர் தொகுதியில் வி. ஸ்ரீநிதி நாயுடு மற்றும் குளச்சல் தொகுதியில் தாரகை கத்பர்ட் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தின் பல்வேறு முக்கிய தொகுதிகளான பொன்னேரி, வேளச்சேரி, சோளிங்கர், உதகமண்டலம், சிவகாசி மற்றும் நாங்குநேரி உள்ளிட்ட 27 இடங்களுக்குத் வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை இறுதி செய்துள்ளது.

Source link