ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆளும் திமுக பரபரப்பாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதன் கூட்டணிக் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு, நிர்வாகிகள் கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சார பணிகள் என மும்மரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, கூட்டணி தொகுதி பங்கீட்டைப் பொறுத்த வரையில், இழுபறி நிலைகளைக் கடந்து திமுக சிறப்பாக நடத்தி முடித்துள்ளது .
இதில், திமுக 175 இடங்களில் போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4 இடங்கள் எனக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொகுதி நிலவரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் தொகுதி தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது.
நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
